வாடகை வீட்டை காலி செய்வதில் பிரச்சினை: உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு வாலிபர் கைது
வாடகை வீட்டை காலி செய்வதில் ஏற்பட்ட பிரச்சினையில் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குடி:
பெட்ரோல் குண்டு வீச்சு
ஆலங்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவர் தனது வீட்டை வாடகைக்கு அதே பகுதியில் உள்ள தங்கராஜ் மகன் ஹரிஹரிசுதன் (29) என்பவருக்கு விட்டதாக கூறப்படுகிறது. வாடகைக்கு இருந்த ஹரிஹரிசுதன் வீட்டை காலி செய்யாமல் இருந்து வந்தார். இந்நிலையில், ஹரிஹரிசுதனுக்கும், செந்தில்குமாரின் தாய் விஜயலட்சுமிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து ஹரிஹரிசுதன் அன்றே வீட்டை காலி செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஹரிஹரிசுதன் பீர் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி (பெட்ரோல் குண்டு) அதனை செந்தில்குமார் வீட்டின் கதவில் வீசிவிட்டு சென்று விட்டார். கதவில் தீப்பிடித்து எரிந்ததை தண்ணீர் ஊற்றி செந்தில்குமார் குடும்பத்தினர் அணைத்தனர்.
வாலிபர் கைது
இதுகுறித்து செந்தில்குமார் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிஹரிசுதனை கைது செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story