கோவையில் பா.ஜ.க போராட்டம்: வேடிக்கை பார்த்த மூதாட்டியை வேனில் ஏற்றிய போலீசார்..!
கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினரை கைது செய்ய முற்படும் போது வேடிக்கை பார்த்த மூதாட்டியை தவறுதலாக போலீசார் வேனில் ஏற்றினர்.
கோவை:
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதமர் மோடி புகைப்படத்தை மாட்ட அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்க பா.ஜனதா நிர்வாகிகள் கோவை கலெக்டர் அலுவலகம் வந்தனர். இந்நிலையில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.
அப்போது கோவையை அடுத்த கோணவாய்க்கால்பாளையத்தை சேர்ந்த பச்சியம்மாள் என்ற மூதாட்டி தனது மகளுடன் தண்டுமாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.
கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பஸ்நிறுத்தத்தில் பஸ்சை விட்டு இறங்கிய அவர், அந்த வழியாக மகளுடன் நடந்து சென்றார். பின்னர் அவர், அந்த பகுதியில் பா.ஜனதா நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டதை பார்த்துக்கொண்டு இருந்தார். உடனே அவரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக நினைத்து போலீசார் பச்சியம்மாளையும் வேனில் ஏற்றினார்கள்.
இதனால் பதறிய அவர் நான் போராட்டத்தில் ஈடுபடவில்லை, கோவிலுக்கு சாமி கும்பிட செல்கிறேன் என்றுக்கூறி அழுதார். இதையடுத்து அவரை போலீசார் வேனில் இருந்து கீழே இறக்கிவிட்டனர்.
Related Tags :
Next Story