‘மன்னர் வகையறா’ பட விவகாரம்: நடிகர் விமல் ரூ.1.74 கோடி மோசடி - பட அதிபர் மகள் கண்ணீர் புகார்


‘மன்னர் வகையறா’ பட விவகாரம்: நடிகர் விமல் ரூ.1.74 கோடி மோசடி - பட அதிபர் மகள் கண்ணீர் புகார்
x
தினத்தந்தி 26 April 2022 10:33 AM IST (Updated: 26 April 2022 10:33 AM IST)
t-max-icont-min-icon

‘மன்னர் வகையறா’ பட விவகாரத்தில் நடிகர் விமல் ரூ.1.74 கோடி மோசடி செய்துவிட்டார் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பட அதிபர் மகள் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

சென்னை:

‘பசங்க’, ‘களவாணி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் விமல். இவர் ‘மன்னர் வகையறா’ என்ற படத்துக்காக தன்னிடம் ரூ.5 கோடி பணம் பெற்று மோசடி செய்துவிட்டார் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சினிமா தயாரிப்பாளர் கோபி கடந்த வாரம் புகார் மனு அளித்திருந்தார். இந்த புகாரை நடிகர் விமல் மறுத்தார். சினிமா வினியோகஸ்தர் சிங்காரவேலனும் விமல் மீது புகார் அளித்தார்.

இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு பணிகளை தொடங்கிய கணேசனின் மகள் ஹேமா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் விமல் மீது கண்ணீர் மல்க மோசடி புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

திருப்பூரில் எளிய குடும்பத்தில் பிறந்து, இறைச்சி கடைகள் நடத்தி அதன் பின்னர் ரியல் எஸ்டேட் மூலம் தன்னை தொழில் அதிபராக நிலைநிறுத்திக்கொண்டவர் மறைந்த என் தந்தை கணேசன். இவருக்கு சினிமா மீது அதிக மோகம் இருந்தது. எனவே அவரை மூளைச்சலவை செய்து ‘மன்னர் வகையறா’ என்ற திரைப்படத்தை விமல் தொடங்க வைத்தார்.

படத்தின் பட்ஜெட் ரூ.5 கோடி என்றும், ரூ.1.5 கோடி மட்டும் முதலீடு செய்தால் மீதித்தொகையை சினிமா உலகத்துக்குள் கடனாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் விமல் உத்தரவாதம் அளித்தார். அதை நம்பிய எனது தந்தை சென்னை வந்தார்.

2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பட்டுக்கோட்டையில் படப்பிடிப்பு தொடங்கியது. 17 நாட்கள் படப்பிடிப்பு நடந்துமுடிந்திருந்த வேளையில் விமலுக்கும், கதாநாயகிக்கும் தனிப்பட்ட காரணங்களுக்காக சண்டை ஏற்பட்டது. அதனால் 2 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறாமல் போனது. அதனால் மனம் வெறுத்துப்போன என் தந்தை, அதற்கு மேல் படப்பிடிப்பை தொடர மனமில்லாமல் ரத்து செய்ய சொல்லிவிட்டு மீண்டும் திருப்பூருக்கு வந்துவிட்டார். 

அதன்பின்னர் எனது தந்தையை சந்திக்க விமல் வந்தார். அப்போது அவரிடம், ‘உன்னை நம்பித்தான் இந்த துறைக்கு வந்து முதலீடு செய்தேன். தனிமனித ஒழுக்கம் இல்லாத உன்னை நம்பி நான் மேலும் ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பவில்லை. இந்த படம் அப்படியே கிடக்கட்டும். என் நஷ்டத்தை ‘ரியல் எஸ்டேட்’ தொழிலில் ஈடுகட்டி விடுவேன்’ என்று கூறி படத்தை தயாரிக்க விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டார்.

‘இந்த படத்தை நம்பித்தான் எனது எதிர்காலம் உள்ளது. எனவே படத்தை நானே மேற்கொண்டு தயாரித்துக்கொள்கிறேன். நீங்கள் செலவு செய்த தொகையை திருப்பி தந்துவிடுவேன்’ என்று நடிகர் விமல் கடந்த 10.3.2016 அன்று ஒப்பந்தம் செய்தார்.

ஆனால் அவர் சொன்னபடி நடக்கவில்லை. எனவே சென்னை ஐகோர்ட்டில் எனது தந்தை வழக்கு தொடர்ந்தார். அதன்பின்னர் விமல் எனது தந்தையுடன் சமரசம் செய்துகொண்டு பணத்தை திருப்பி தந்துவிடுவதாக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி எந்த தொகையையும் இதுவரை விமல் திருப்பித்தரவில்லை. 

ஒப்பந்தத்தின்படி படத்தின் மற்ற மொழி உரிமைகள் என் தந்தையிடம் இருந்தது. ஆனால் என் தந்தைக்கு தெரியாமல் படத்தின் தெலுங்கு ‘டப்பிங்’ உரிமையை வேறொருவருக்கு விமல் விற்று எங்களை மோசடி செய்துவிட்டார். எனவே விமல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு வந்துசேர வேண்டிய ரூ.1 கோடியே 73 லட்சத்து 78 ஆயிரம் பணத்தை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு தொடர்பாக ஹேமா கண்ணீர் மல்க நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘எனக்கு அழுகை தானாகத்தான் வருகிறது. கிளிசரின் ஒன்றும் போடவில்லை’ என்றார்.

சினிமா வினியோகஸ்தர் சிங்காரவேலன் அளித்த புகார் தொடர்பாக சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் கண்ணன் முன்னிலையில் நடிகர் விமல் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

Next Story