ஜோலார்பேட்டை அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலி
ஜோலார்பேட்டை அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் அருகே உள்ள சின்ன மூக்கனூரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் பிரகாஷ் ( வயது 28). சவுண்ட் சர்வீஸ் நடத்தி வந்தார். திருப்பத்தூர் கல்லறை மேடு பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ்குமார் (23). இவர் பிரகாஷிடம் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் ஜோலார்பேட்டை அடுத்த பால்னாங்குப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நாளை திருமணம் நடைபெற உள்ளதால் மண்டபத்திற்கு சீரியல் செட்டு அமைப்பதற்காக பிரகாஷ், சஞ்சீவ் குமார் இருவரும் பைக்கில் வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது ஜோலார்பேட்டை அருகே சாலை நகர் பகுதியில் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை சாலையில் வந்தபோது, தர்மபுரியில் இருந்து வேலூர் நோக்கி வந்த லாரி பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அங்கிருந்தவர்கள் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த லாரி டிரைவர் ராஜியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story