சென்னை மின்சார ரெயில் விபத்துக்கு என்ன காரணம் ? காவல்துறை வெளியிட்ட தகவல்
தொடர்ந்து நடைமேடை 1-ன் தொடக்கத்தில் இருந்த கடையின் சுவற்றின் மீது மோதி நிற்காமல் கடையை உடைத்து கொண்டு உள்ளே சென்றது.
சென்னை,
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கமாகவும், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கும் மின்சார ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை 4.50 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி மின்சார ரெயில் புறப்பட இருந்தது.
இதற்காக மாலை 4.25 மணி அளவில் கடற்கரை பணிமனையில் இருந்து 1-வது நடைமேடைக்கு 12 பெட்டிகள் கொண்ட நவீன ‘3 பேஸ்’ மின்சார ரெயில் எடுத்து வரப்பட்டது.
இந்த ரெயிலை கேரளாவை சேர்ந்த பவித்ரன் என்பவர் இயக்கி வந்தார். ரெயில் நிலையத்துக்கு உள்ளே வந்த மின்சார ரெயில் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறியது. தொடர்ந்து நடைமேடை 1-ன் தொடக்கத்தில் இருந்த கடையின் சுவற்றின் மீது மோதி நிற்காமல் கடையை உடைத்து கொண்டு உள்ளே சென்றது. இதனால் அந்த பகுதியில் பெரும் சத்தத்துடன் புழுதி கிளம்பி பெரும் புகை மூட்டமாக காட்சி அளித்தது.
இதைக்கண்ட அங்கிருந்த பயணிகள் அலறி அடித்து கொண்டு ஓடினர். 2 கடைகளின் மீது மோதிய பின்னர் அங்கிருந்த கட்டிட சுவரின் மீது மின்சார ரெயில் மோதி நின்றது.
ரெயிலில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. இருந்தபோதிலும் மின்சார ரெயிலின் என்ஜின் பெட்டியும், அடுத்திருந்த பெட்டியும் என 2 பெட்டிகள் மட்டும் இந்த விபத்தில் பெரும் சேதத்துக்கு உள்ளாகி தடம்புரண்டன.
இதில் என்ஜின் பெட்டி 2 கடைகளின் இடிபாடுகளுக்கு மேல் சென்று நின்றது. இந்த விபத்து குறித்து உடனடியாக ரெயில் நிலைய அதிகாரிகள் உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் 1-வது நடைமேடைக்கு செல்லும் அனைத்து மின்சார இணைப்பையும் ரெயில்வே ஊழியர்கள் துண்டித்தனர்.
இந்த நிலையில் விபத்துக்குள்ளான மின்சார ரெயிலை, ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. சந்தோஷ் என்.சந்திரன், சென்னை ரெயில்வே போலீஸ் எஸ்.பி. இளங்கோ, சென்னை எழும்பூர் டி.எஸ்.பி. ஸ்ரீகாந்த் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்தநிலையில், சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் நடந்த மின்சார ரெயில் விபத்துக்கு ஓட்டுநரின் தவறே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதாலேயே விபத்து நிகழ காரணம் என ரெயில் ஓட்டுநர் கூறியதாக ரெயில்வே காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்து குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story