அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
இரவு நேரங்களில் மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரவு நேரங்களில் மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு பஸ்
கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில், புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகம் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதுச்சேரி முதல் பரிக்கல்பட்டு வரையில் பி.ஆர்.டி.சி. பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பஸ் புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம் மகாத்மா காந்தி மருத்துவமனை பஸ் நிறுத்தம் வந்து, அங்கிருந்து சார்காசிமேடு, பின்னாச்சிக்குப்பம், பாகூர் வழியாக பரிக்கல்பட்டு செல்கிறது.
இரவு 8.30 மணியளவில் பரிக்கல்பட்டில் இருந்து புறப்படும் இந்த பஸ் மேற்கண்ட வழித்தடத்தில் செல்லாமல், பரிக்கல்பட்டில் இருந்து முள்ளோடை சென்று அங்கிருந்து கன்னியக்கோவில் வழியாக புதுச்சேரிக்கு செல்கிறது. இதனால் இரவு நேரங்களில் பாகூர், பின்னாச்சிக்குப்பம், சார்காசிமேடு பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
பஸ் சிறைபிடிப்பு
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், இன்று காலை பாகூர் வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து வழக்கமான வழித்தடத்தில் பஸ் இயக்கப்படும் என்று டிரைவர், கண்டக்டர் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்களை எச்சரிக்கை செய்து பொதுமக்கள் பஸ்சை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story