விருதுநகர்: ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது..!
திருச்சுழி அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
காரியாபட்டி,
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட தும்ம சின்னம்பட்டி பகுதியில் உள்ள ஒரு இடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எல்லை கற்கள் உடைக்கப்பட்டன. இதுதொடர்பாக பெருநாழியை சேர்ந்த தங்கராஜ்பாண்டியன், எம்.ரெட்டியபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் ராமநாதபுரம் மாவட்டம் ராமசாமிபட்டியை சேர்ந்த தங்கமணி (வயது45), அவரது நண்பர்களான தும்முசின்னம்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ், சோலை, முஸ்டக்குறிச்சியை சேர்ந்த அய்யனார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இருந்து தங்கமணி பெயரை நீக்க எம்.ரெட்டியபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் ரூ.30 ஆயிரம் லஞ்சமாக பெற்றதாகவும், மேலும் நிபந்தனை ஜாமீனில் அவர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போடாமல் இருக்க சப்- இன்ஸ்பெக்டர் ராமநாதன் மீண்டும் தங்கமணியிடம் ரூ.10 ஆயிரம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தங்கமணி, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதனிடம், தங்கமணி கொடுத்த போது கையும், களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார், ராமநாதனை பிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story