தமிழகத்தில் 2026-ல் பாமக ஆட்சி அமைக்கும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
தமிழகத்தில் 2026-ல் பா.ம.க. ஆட்சியை அமைக்கும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.
கிருஷ்ணகிரி,
பாட்டாளி மக்கள் கட்சியின் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் கிருஷ்ணகிரி மீனாட்சி மகாலில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் பா.ம.க. மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:-
கிருஷ்ணகிரி ஒரு காலத்தில் பா.ம.க.வின் முதன்மை மாவட்டமாக இருந்தது. டாக்டர் ராமதாஸ் இந்த மாவட்டத்திற்கு வந்து மக்களை சந்தித்து கட்சியில் தொண்டர்களை திரட்டுவார். அந்த எழுச்சி மீண்டும் வர உள்ளது. பா.ம.க. கொடி அனைத்து கிராமங்களிலும் பறக்க வேண்டும். தற்போது 3 மாவட்ட செயலாளர்கள் இந்த மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.
2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் 3 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். அவர்களுடன் நீங்கள் இணைந்து சிறப்பாக பணியாற்றிட வேண்டும். மாவட்ட செயலாளர்களும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை பெற்று அதன்படி செயல்பட வேண்டும். நான் அனைத்து கிராமங்கள் தோறும் வருவேன்.
கடந்த 55 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆட்சியால் தமிழகம் தேக்க நிலையில் உள்ளது. புதிய திட்டங்கள் வராதா, கிடைக்காதா என்று மக்கள் ஏக்கத்திலும், ஆதங்கத்திலும் உள்ளனர். அதற்காக மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் மக்களின் மனதில் மேலோங்கி உள்ளது. பா.ம.க.வால் அந்த மாற்றத்தை தர முடியும்.
உங்களின் பேச்சை ஆதரவாக்கி, ஓட்டுக்களாக மாற்றிட வேண்டும். 2026-ல் தமிழ்நாட்டில் பா.ம.க. ஆட்சி அமைக்கும். அரசியல் களத்தில் நமக்கு நல்ல சூழல் உள்ளது. மீண்டும் அதே பழைய எழுச்சியை உருவாக்கிட வேண்டும். அனைவரும் களமிறங்கி பணியாற்றிட வேண்டும். ஏன் என்றால் புதிய செயல் திட்டங்கள் நம்மிடம் உள்ளது.
இந்த மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்ற வேண்டி உள்ளது. இதற்காக எனது தலைமையில் போராட்டங்கள் நடக்கும். வன்னியர்களுக்காக 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது சாதி ரீதியிலானது அல்ல. தமிழகத்தின் வளர்ச்சிக்கான பிரச்சினை. சமூக நீதிக்கான பிரச்சினை. தமிழகத்தில் எந்த சமூகத்திற்கு பிரச்சினை என்றாலும் முதலில் குரல் கொடுப்பது பா.ம.க. தான்.
தமிழகத்தில் வன்னியர்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் 40 சதவீதம பேர் உள்ளனர். இவர்கள் 2 சமூகத்தினர் முன்னேறினால் தமிழகம் முன்னேறும். வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்காக விரைவில் மீண்டும் சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி நிறைவேற்றி தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story