மூதாட்டியை கொன்று சாக்கு மூட்டையில் உடலை கட்டி வீசிய கொடூரம் - நகைக்காக நடந்ததா?


மூதாட்டியை கொன்று சாக்கு மூட்டையில் உடலை கட்டி வீசிய கொடூரம் - நகைக்காக நடந்ததா?
x
தினத்தந்தி 27 April 2022 7:32 AM IST (Updated: 27 April 2022 7:32 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே மூதாட்டியை கொன்று சாக்கு மூட்டையில் உடல் கட்டி வீசப்பட்டுள்ளது. நகைக்காக இந்த கொலை நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே உள்ள மேலநெம்மேலி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (வயது 55). இவருடைய மகன்கள் காமராஜ், கனகராஜ் ஆகியோர் வெளியூரில் வசித்து வருகின்றனர்.

இதனால் இவர், தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணவேணி திடீரென மாயமானார்.

இதுதொடர்பாக அவருடைய மகன் கனகராஜ் வடுவூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 20-ந் தேதி புகார் அளித்தார். அந்த புகாரில், கிருஷ்ணவேணி 6 பவுன் நகைகள் அணிந்திருந்ததாகவும், 20 பவுன் நகைகள் வீட்டில் இருந்தது எனவும், எனவே நகைக்காக யாரேனும் அவரை கடத்தி சென்றிருக்கலாம் என்றும் கூறி இருந்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோப்பநாய் மூலம் துப்பு துலக்கும் பணியை மேற்கொண்டனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் சித்ரா பவுர்ணமி தினத்தன்று அந்த கிராமத்தில் நடந்த சாமி வீதி உலாவில் கிருஷ்ணவேணி கலந்து கொண்டதும், அதற்கு பின்னர் அவரை காணவில்லை என்பதும் தெரியவந்தது.

அவருடைய செல்போன் எண்ணை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டபோது கடைசியாக அவர் இருந்த பகுதி மகாதேவபட்டினம் என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் நேற்று வடுவூர் அருகே முக்குளம் சாத்தனூர் வயல்வெளியில் சாக்கு மூட்டை ஒன்று கிடப்பதாகவும், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வடுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் பெண் பிணம் இருந்தது. அது காணாமல் போன கிருஷ்ணவேணியின் உடல் என்பது தெரியவந்தது.

பின்னர் போலீசார் கிருஷ்ணவேணியின் உடலை மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கிருஷ்ணவேணி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு இருப்பதும், அவருடைய உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசி சென்றிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பெண் மாயம் தொடர்பான வழக்கை கொலை வழக்காக மாற்றி கிருஷ்ணவேணி நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணவேணி கொலை வழக்கு தொடர்பாக 3 பேரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மூதாட்டியை கொன்று உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story