தஞ்சை தேர் திருவிழா விபத்து - அரசியல் தலைவர்கள் இரங்கல்


தஞ்சை தேர் திருவிழா விபத்து - அரசியல் தலைவர்கள் இரங்கல்
x
தினத்தந்தி 27 April 2022 10:07 AM IST (Updated: 27 April 2022 10:09 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை தேர் திருவிழா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

தஞ்சாவூரில் களிமேடு பகுதியில் உள்ள அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு தேரோட்டம் நடைபெற்றது. அப்போது தேர் மீது உயர்மின் அழுத்த கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பேர் பலியாகினர். 

15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த நிலையில் தஞ்சாவூர் தேர் திருவிழா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'தஞ்சாவூர், களிமேடு அப்பர் கோவில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். 

உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன், சிகிச்சை பெற்று வருவோர் பூரண நலம் பெற்று விரைவில், வீடு திரும்ப வேண்டுகிறேன். மரணமடைந்தோர்  குடும்பத்துக்கு உரிய இழப்பீடும், காயமடைந்தோர்க்கு தக்க நிவாரணமும் வழங்கி தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'தஞ்சை களிமேடு தேர் பவனி விபத்து செய்தியை கேள்விபட்டு மிகவும் துயரத்தில் உள்ளேன். 3 சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர் என்பதை மனம் ஏற்க மறுக்கின்றது. 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன். இனி இது போன்ற தேர் விபத்துக்கள் மூலம் உயிரிழப்புகள் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு உயர்மட்ட குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்!' என்று தெரிவித்துள்ளார்.

Next Story