மார்த்தாண்டம் அருகே டாரஸ் லாரி மோதி கேரள வாலிபர் பலி..!


மார்த்தாண்டம் அருகே டாரஸ் லாரி மோதி கேரள வாலிபர் பலி..!
x
தினத்தந்தி 27 April 2022 10:22 AM IST (Updated: 27 April 2022 10:22 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே டாரஸ் லாரி மோதி கேரள வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு வாலிபர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

மார்த்தாண்டம்:

தூத்துக்குடியில் இருந்து இன்று அதிகாலை 4 மணியளவில்  எம் சாண்ட் மணல் பாரத்துடன் ஒரு பெரிய டாரஸ் லாரி கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. மார்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு பகுதியில் அந்த டாரஸ் லாரி சென்று கொண்டிருந்தது. 

அப்போது திடீரென்று எதிரே வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது அந்த டாரஸ் லாரி பலமாக மோதியது. டாரஸ் லாரி மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து அந்த வாலிபர் கீழே தூக்கி வீசப்பட்டார். 

ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த வாலிபர் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அந்த வாலிபர் சென்ற மோட்டார் சைக்கிள் பல துண்டுகளாக உடைந்து சிதறியது. அந்த டாரஸ் லாரி சம்பவ இடத்தில் கவிழ்ந்து அதிலிருந்த மணலும் கீழே சரிந்தது.சம்பவம் நடந்ததும் டாரஸ் லாரியை அங்கேயே போட்டு விட்டு அதன் டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று இறந்த வாலிபரின் உடலை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணையில் இறந்த வாலிபர் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை, பள்ளிச்சல், வலியவிளாகம் வீடு கிருஷ்ணன் மகன் உண்ணி (39)  என்பது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே விபத்து நடந்த பகுதிக்கு அருகில் சுமார் 10 அடி தூரத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று ஒரு மின் கம்பத்தில் மோதி அந்தப் பகுதியில் கிடந்தது. 

அதில் இருந்த ஒரு வாலிபர் அந்தப் பகுதியில் படுகாயத்துடன் கிடந்தார். அவர் மோட்டார் சைக்கிளில் அந்த டாரஸ் லாரிக்கு பின்னால் சென்றிருக்கலாம் என்றும் டாரஸ் லாரி மோட்டார் சைக்கிளில் மோதியதை பார்த்ததும் நிலை தடுமாறி மின்கம்பத்தில் அவர் சென்றமோட்டார் சைக்கிள் மோதி இருக்கலாம் என்றும் தெரிகிறது.

படுகாயத்துடன் கிடந்த அந்த வாலிபரை அப்பகுதி மக்கள் மீட்டு பக்கத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அந்த வாலிபரை டாக்டர்கள் பரிசோதித்து விசாரித்தபோது அவருக்கு விபத்து நடந்ததும் வேறு எதுவும் தெரியவில்லை.

அவர் முன்னுக்குப்பின் கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றார். மேலும் அவரை குறித்து கேட்டபோது அவருக்கு எதுவும் தெரியவில்லை. நான் எங்கே இருக்கிறேன். எப்படி இங்கே வந்தேன் என்று ஒன்றும் தெரியாதவராக உளறுகின்றார். 

அவர் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது ஞாபக மறதி ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் மார்த்தாண்டம் போலீசார் தலைமறைவாகிவிட்ட டாரஸ் லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story