திராவகம் வீசிய வழக்கில் 40 நாட்கள் கழித்து கள்ளக்காதலி சாவு..!


திராவகம் வீசிய வழக்கில் 40 நாட்கள் கழித்து கள்ளக்காதலி சாவு..!
x
தினத்தந்தி 27 April 2022 2:05 PM IST (Updated: 27 April 2022 2:05 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை அருகே கள்ளக்காதலி மீது திராவகம் வீசியதில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 40 நாட்கள் கழித்து உயிரிழந்தார்.

சிவகங்கை:

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் முத்துராமலட்சுமி (வயது 35). இவர் ஊர், ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, தனது தாயுடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் முத்துராமலட்சுமி போடிநாயக்கனூரைச் சேர்ந்த செல்வம் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலானது. இருவரும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு வந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர்.

முத்துராமலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு செல்வத்திடம் அவ்வப்போது வற்புறுத்தி உள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். இந்த விவகாரத்தில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த செல்வத்துக்கும் முத்துராமலட்சுமிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த செல்வம், தான் ஏற்கனவே வாங்கி மறைத்து வைத்திருந்த திராவகத்தை எடுத்து முத்துராமலட்சுமி முகத்தில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

தேவகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிந்து செல்வத்தை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். சிகிச்சை பெற்று வந்த முத்துராமலெட்சுமி நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். அதனைத்தொடர்ந்து செல்வம் மீது தொடர்ந்த கொலை முயற்சிவழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது.

Next Story