பூரண மதுவிலக்கு எப்போது அமல்படுத்தப்படும்? - தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி
தமிழ்நாட்டில் நடக்கும் 70 சதவீத குற்றங்களுக்கு மதுவே காரணம் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
வேலூர்
பாட்டாளி மக்கள் கட்சி வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் வேலூரில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.
கூட்டத்துக்கு பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழ்நாட்டில் நடக்கும் 70 சதவீத குற்றங்களுக்கு மதுவே காரணம். டாஸ்மாக் கடைகளை மூடினால் சட்டம்-ஒழுங்கு சீராக இருக்கும். தி.மு.க. பூரண மதுவிலக்கை கொண்டு வரும் என்று தெரிவித்தார்கள். அதனை எப்போது செயல்படுத்துவார்கள் என்பது தான் கேள்வி. இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு பூரண மதுவிலக்கை எப்போது அமல்படுத்தப்படும் என்று அறிவிக்க வேண்டும்.
நீட்தேர்வு வந்த பின்னர் மருத்துவக்கல்வி வணிகமாக மாறி விட்டது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட்தேர்வு ரத்து மசோதாவை கவர்னர் மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். பேரறிவாளன் உள்பட 7 பேரையும் எந்த அரசியலும் பார்க்காமல் விடுதலை செய்ய வேண்டும். தமிழகத்தில் தற்போது தினமும் 6 முதல் 8 மணி நேரம் மின்வெட்டு நிலவி வருகிறது.
மின்வெட்டு பிரச்சினையை உடனடியாக தீர்க்க தமிழக அரசு வேண்டும். பள்ளி மாணவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்க அவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் எடுக்க வேண்டும். ஆனால் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story