சார்-பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமையும் செயல்படும் - வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி
அலுவலகங்களில் பணியாற்றும் பொது மக்களின் வசதிக்காக விடுமுறை நாட்களான சனிக்கிழமையும் சார்-பதிவாளர் அலுவலகம் செயல்படும்.
சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் இன்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பல்வேறு கேள்விகளுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பதிலுரை அளித்தார்.
அவர் கூறியதாவது:-
“அலுவலகங்களில் பணியாற்றும் பொது மக்களின் வசதிக்காக விடுமுறை நாட்களான சனிக்கிழமையும் சார்-பதிவாளர் அலுவலகம் செயல்படும். பதிவுத் துறையில் ஆவண எழுத்தர் உரிமங்கள் புதிதாக வழங்கப்படும்.
வணிக வரி மற்றும் பதிவுத்துறைகள் அரசுக்கு வருவாய் ஈட்டுவதில் மிக முக்கிய பங்காற்றி வருகின்றன. கடந்த ஆண்டுகளை விட வணிக வரித் துறையில் வருவாய் அதிகரித்துள்ளது.
பதிவுத்துறையில் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகள், தவறான ஆவணப் பதிவுகளை கண்டறிந்து சரி செய்ய சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. போலி பட்டியல் தயாரித்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“எனது விலைப் பட்டியல் எனது உரிமை" என்ற திட்டம் செயல்படுத்தப்படும். வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க தேசிய தகவல் மையம் உருவாக்கியுள்ள ஜிஎஸ்டி மென்பொருள் வாங்கி பயன்படுத்தப்படும்.
திருமணச் சான்றிதழில் திருத்தம் செய்ய இணைய வழியாக விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story