பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் கை சிதைந்தது
திருவண்டார்கோவிலில் பஸ்ஸில் பெண் தவறி விழுந்ததில் கை பின்பக்க சக்கரத்தில் சிக்கி சிதைந்தது .
திருபுவனை அருகே திருவண்டார்கோவில் பெரியபேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரா (வயது 55), கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இன்று காலை 9 மணியளவில் மதகடிப்பட்டு பகுதியில் கட்டிட வேலைக்கு செல்வதற்காக திருவண்டார்கோவில் பஸ் நிறுத்தத்தில் சந்திரா காத்திருந்தார்.
அப்போது புதுச்சேரியில் இருந்து சன்னியாசிக்குப்பம் சென்ற தனியார் பஸ் வந்து நின்றது. இதன் முன்பக்க படிக்கட்டில் சந்திரா ஏறினார். திடீரென்று பஸ் புறப்பட்டதால் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கினார்.
இதில் அவரது இடது கை சிதைந்து ரத்தம் கொட்டியது. வலியில் துடித்த அவரை, பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சந்திரா சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் மீது வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story