இலங்கைக்கு உதவ தனி தீர்மானம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி


இலங்கைக்கு உதவ தனி தீர்மானம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி
x
தினத்தந்தி 29 April 2022 12:52 PM IST (Updated: 29 April 2022 1:07 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, இலங்கை மக்களுக்கு உதவ மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

இலங்கை மக்களுக்கு உதவ மத்திய அரசின் அனுமதி கோரி முதல்-அமைச்சர் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.  

மத்திய அரசின் அனுமதி கோரி, அரசினர் தீர்மானத்தை முதல்-அமைச்சர் பேரவையில் முன் வைத்து பேசினார்.

சட்டப்பேரவையில்  முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசியதாவது, 

இலங்கைக்கு உதவ, மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே அனுமதி கேட்டும் இதுவரை பதில் வரவில்லை.

தமிழகத்திலிருந்து ரூ.25 கோடி மதிப்பிலான அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட உதவி பொருள்களை அனுப்பி வைக்க அனுமதி தேவை. இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய வேண்டும் என்பதே விருப்பம். இலங்கை மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். இலங்கை முழுவதும் உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்திய தூதரகம் வழியாக தான் இலங்கை மக்களுக்கு உதவி பொருட்களை அனுப்பி வைக்க முடியும்.தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, இலங்கை மக்களுக்கு உதவ மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

இலங்கை மக்களுக்கு உதவ பிரதமர் மோடியிடம் நேரடியாகவும் கோரிக்கை வைத்துள்ளேன். அனுமதி அளிப்பது தொடர்பாக இதுவரை எந்த பதிலும் வரவில்லை இலங்கைக்கு 40,000 டன் அரிசி, உயிர் காக்கும் மருந்துகள், 500 டன் பால் பவுடர் அனுப்பி வைக்க தயார். இலங்கையில் அத்தியவசிய பொருட்கள் விலை உயர்வு; மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது; சிலிண்டர்கள் கிடைப்பது இல்லை.  இலங்கை பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டு பிரச்சினையாக பார்க்க முடியாது. இலங்கை தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு.

தொடர்ந்து முதல்வர் முன்வைத்த தீர்மானத்தின் மீது பேரவையில் உறுப்பினர்கள் பேசினர். பிறகு தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை மக்களுக்கு உதவிட அனுமதி கோரும் தீர்மானத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன. இலங்கைக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள், மருந்துகளை அனுப்பி வைக்க அனுமதி தர மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அனைத்து மக்களுக்கும் உதவிட அனுமதி கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இலங்கை மக்களுக்கு உதவ, தனது சொந்த நிதியில் இருந்து ரூ.50 லட்சம் வழங்குவதாக பேரவையில் ஓபிஎஸ் அறிவித்தார். இலங்கை மக்களுக்கு உதவ ரூ.50 லட்சம் வழங்க முன்வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  நன்றி  தெரிவித்தார்.

Next Story