சுகாதார திருவிழா உடலையும் உணர்வுகளையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்கவேண்டும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுரை


சுகாதார திருவிழா உடலையும் உணர்வுகளையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்கவேண்டும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுரை
x
தினத்தந்தி 29 April 2022 8:12 PM IST (Updated: 29 April 2022 8:12 PM IST)
t-max-icont-min-icon

உடலையும், உணர்வுகளையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்கவேண்டும் என்று சுகாதார திருவிழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தினார்.

புதுச்சேரி
உடலையும், உணர்வுகளையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்கவேண்டும் என்று சுகாதார திருவிழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தினார்.

சுகாதார திருவிழா

மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் புதுவை சுகாதாரத்துறை சார்பில் ‘ஆரோக்கியமான இந்தியாவை நோக்கி’ என்ற தலைப்பில் சுகாதார திருவிழா புதுவை பழைய துறைமுக வளாகத்தில் 3 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்க விழா நடந்தது.
விழாவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

பிரதமர் உறுதி

திருவிழாக்கள் என்றாலே மகிழ்ச்சிதான். சுகாதார திருவிழாவை மக்கள் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எந்த திருவிழாவாக இருந்தாலும் அது புதுச்சேரிக்கும் வரவேண்டும் என்பதில் பிரதமர் உறுதியோடு உள்ளார். அதனால் எல்லா திருவிழாக்களும் புதுச்சேரிக்கு வருகின்றன. அதற்காக பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் நாம் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் ரூ.5 லட்சம் வரை சிகிச்சைபெற ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமர் அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த திட்டத்தில் புதுச்சேரியில்தான் அதிக சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதற்கான விருதையும் புதுச்சேரி பெற்றுள்ளது.

உணவு முறை

ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நாம் எதையும் சாதிக்க முடியும். வருமுன் காப்பதே தமிழர் பண்பாடு. எனவே நாம் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். பணத்தை எண்ணுவதுபோல் சாப்பிடும் முன்பு கலோரியை எண்ணவேண்டும்.
உணவு முறையில் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். சிறுதானியங்கள், பயிறு வகைகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை அதிக அளவில் எடுத்துக்கொள்ளவேண்டும். நமது முன்னோர்கள் எடுத்துக்கொண்ட உணவுகளை நாமும் சாப்பிட வேண்டும். நோயாளிகளிடம் டாக்டர்கள் அனுசரணையுடன் நடந்துகொள்ள வேண்டும்.

உலகத்தரத்தில் சிகிச்சை

புதுவை ஆரோக்கியம், மகிழ்ச்சி நிறைந்த மாநிலமாக இருக்கவேண்டும். உடலையும், உணர்வுகளையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்கவேண்டும். புதுவையில் உள்ள மருத்துவமனைகள் உலகத்தரத்தில் சிகிச்சை அளித்து வருகின்றன. மற்ற நாடுகளில் இருந்தும், நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் மருத்துவ சிகிச்சைக்காக புதுச்சேரியை நாடி வருகிறார்கள்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திர பிரியங்கா, சாய் சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், லட்சுமிகாந்தன், சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த சுகாதார திருவிழா தினமும் பகல் 12 மணிமுதல் இரவு 8 மணிவரை நடக்கிறது. விழாவில் இலவச மருத்துவ பரிசோதனைகள், ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.


Next Story