நாகை அருகே தேர் சக்கரத்தில் சிக்கி பலியான இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்
நாகை அருகே தேரின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலியான சம்பவத்தில் அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்து உள்ளது.
நாகை,
நாகை மாவட்டத்தின் திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் நடந்த சித்திரை திருவிழாவின்போது, முக்கிய நிகழ்வான தெருவடைத்தான் தேர் ஊர்வலம் நள்ளிரவில் நடந்துள்ளது.
இரவு 11.50 மணிக்கு தேர் புறப்பட்டு உள்ளது. 10 அடி தொலைவுக்கு தேர் சென்ற நிலையில், இந்த ஊர்வலத்தில் தேரின் சக்கரம் ஏறியதில் இளைஞர் ஒருவர் சிக்கி உயிரிழந்து உள்ளார். தேருக்கு முட்டுக்கட்டை போட்டபோது இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த தேர் செல்லும்போது அடுத்தடுத்து முட்டுக்கட்டை போட்டபடியே இழுத்து செல்லப்பட்டு உள்ளது. இந்த கோவில் திருவிழாவில் அருகேயுள்ள கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனால், மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
இந்த நிலையில், தேர் புறப்பட்ட பின் முட்டுக்கட்டை போடப்பட்டபோது, தீபராஜன் என்ற இளைஞர் மீது தேரின் சக்கரம் ஏறியது. இந்த சம்பவத்தில் காயமடைந்த தொழிலாளியான தீபராஜன் உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அதில் பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார்.
தஞ்சை அருகே களிமேட்டில் கடந்த 26ந்தேதி நடந்த தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் நாகை அருகே மற்றொரு உயிரிழப்பு சம்பவம் நடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த தீபன்ராஜின் உடல் நாகை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. அவரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார். இதேபோன்று, தீபன்ராஜின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story