கோவில்பட்டி: 10 வருடத்திற்க்கும் மேல் வீட்டில் இருந்த துப்பாக்கி தோட்டாக்கள் - 2 பெண்களிடம் விசாரணை


கோவில்பட்டி: 10 வருடத்திற்க்கும் மேல் வீட்டில் இருந்த துப்பாக்கி தோட்டாக்கள் - 2 பெண்களிடம் விசாரணை
x
தினத்தந்தி 30 April 2022 7:16 PM IST (Updated: 30 April 2022 7:16 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே பெண் ஒருவரின் வீட்டில் 8 துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2 பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி சீனிவாசன் நகரைச் சேர்ந்த அழகு பாண்டி என்பவரது மனைவி ஆனந்தவள்ளி. அழகுபாண்டி இறந்து விட ஆனந்தவள்ளி தனது மகன் பன்னீர் செல்வத்துடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த குட்டி என்ற பெண்மணியும் ஆனந்தவள்ளியும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது. 

மேலும் இருவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. குறைந்த வட்டிக்கு குட்டி பணம் வாங்கி அதிக வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். அந்த வகையில் ஆனந்த வள்ளிக்கும் குட்டி பணம் கொடுத்துள்ளார்.

இதற்கிடையில் பணம் கொடுக்கல், வாங்கலில் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் ஆனந்தவள்ளி வீட்டினை குட்டி பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு, பணத்தினை கொடுத்தால் தான் சாவியை தருவேன் என்று கூறி ஆனந்தவள்ளியை வெளியேற்றிதாக தெரிகிறது.

இதையடுத்து ஆனந்த வள்ளி ராஜபாளையத்தில் வேலை பார்த்து வரும் தனது மகன் பன்னீர் செல்வத்தினை பார்க்க சென்றவர் அங்கேயே தங்கியுள்ளார். 

இந்நிலையில் நேற்று மாலை குட்டி, ஆனந்த வள்ளி வீட்டிற்கு சென்று அங்குள்ள பீரோவை திறந்து பார்த்த போது, அதில் ஒரு சிகரெட் அட்டையில் 8 துப்பாக்கி தோட்டக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து குட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப் இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று 8 தோட்டக்களை கைப்பற்றி குட்டியிடமும், ஆனந்தவள்ளியிடமும் விசாரணை நடத்தினார்கள். 

இறந்து போன தனது கணவர் இந்த தோட்டக்களை வைத்திருந்தாகவும், 10 வருடத்திற்கு மேல் தனது வீட்டில் தோட்டக்கள் இருப்பதாகவும், இது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்ற ஆனந்தவள்ளி தெரிவித்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

Next Story