சுண்ணாம்பாறு பாலத்தில் இருந்து குதித்து பெயிண்டர் தற்கொலை
சுண்ணாம்பாறு பாலத்தில் இருந்து குதித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார். குடும்ப தகராறில் இந்த விபரீத சம்பவம் நடந்தது.
சுண்ணாம்பாறு பாலத்தில் இருந்து குதித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார். குடும்ப தகராறில் இந்த விபரீத சம்பவம் நடந்தது.
மனைவியுடன் தகராறு
லாஸ்பேட்டை, சாமி பிள்ளைதோட்டம் காரைக்கால் அம்மையார் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). பெயிண்டர். இவரது மனைவி மீரா. இவர்களுக்கு பிரதீப் (வயது 11) என்ற மகன், பிரதீஷா (9) என்ற மகள் உள்ளனர்.
இந்தநிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து மீராவை ரமேஷ் தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த மீரா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பாலத்தில் இருந்து குதித்தார்
இதனால் பயந்து போன ரமேஷ் மனமுடைந்து வீட்டில் இருந்து இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார்.
அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு பகுதிக்கு வந்த அவர் மோட்டார் சைக்கிளை பாலத்தில் ஓரமாக நிறுத்தினார். பின்னர் திடீரென்று பாலத்தின் பக்கவாட்டு சுவர் மீது ஏறி சுண்ணாம்பாற்றில் ரமேஷ் குதித்தார்.
அப்போது அங்கு கட்டு மரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே ரமேஷை ஆற்றில் இருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு முதலுதவி செய்தும் பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் சம்பவ இடத்திற்கு தவளக்குப்பம் போலீஸ் ஏட்டு சரவணன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அங்கிருந்து ரமேஷின் உடலை மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை 7 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தை சுண்ணாம்பாறு பாலத்தில் ஏராளமானோர் நின்று பார்த்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story