புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு மானியம்


புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு மானியம்
x
தினத்தந்தி 30 April 2022 9:02 PM IST (Updated: 30 April 2022 9:02 PM IST)
t-max-icont-min-icon

புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு மானியம் வழங்குவது தொடர்பாக வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு மானியம் வழங்குவது தொடர்பாக வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
ரங்கசாமி
இந்திய தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் தென்மண்டல கவுன்சில் கூட்டம் புதுவை அக்கார்டு ஓட்டலில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் தென்னிந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
புதுவை சிறிய மாநிலம். அதேநேரத்தில் சிறந்த மாநிலமும் கூட. சித்தர்களின் ஆன்மிக பூமியாக புதுச்சேரி திகழ்கிறது. புதுவையில் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் வரவேண்டும் என்பதுதான் எங்கள் அரசின் எண்ணம். இதனால் உள்ளூர் இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
உள்கட்டமைப்பு வசதிகள்
ஏழை மாணவர்களும் மருத்துவம், தொழில்கல்வி படிப்பதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க விரும்புகிறோம். அவர்களுக்கு வேலைதர வேண்டியதும் அவசியமாக இருக்கிறது. அவர்களுக்கு உரிய பயிற்சி தேவைப்படும் என்று நான் நம்புகிறேன். அந்த பயிற்சிகளை மத்திய அரசோடு சேர்ந்து கொடுப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
புதிய தொழில் தொடங்க எளிமையான வழியில் உரிமங்கள் வழங்க அரசு உதவியாக இருக்கும். புதிய தொழிற்சாலைகள் வருகைக்காக உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க ஆர்வமுடன் உள்ளோம்.
வேலைவாய்ப்பு
புதுவையை பொறுத்தவரை குடிநீர், சாலை வசதி சிறப்பாக உள்ளது. விமான போக்குவரத்தும் தற்போது தொடங்கியுள்ளது. விமான நிலைய விரிவாக்கத்துக்காக தமிழக பகுதியில் 300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது முடிந்தால் பெரிய அளவிலான விமானங்கள் வந்து செல்ல ஏதுவாக இருக்கும்.
தொழில் முனைவோர்கள் புதுச்சேரியில் தொழில் தொடங்கினால் அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். அதற்கு ஏதுவாக தொழிற்சாலைகளுக்கு உதவிட நாங்கள் விரும்புகிறோம். உரிமங்களை விரைவாக கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மானியம்
தொழில் முனைவோர்களுக்கு செய்து கொடுக்கும் உதவிகளை நீங்கள் மற்றவர்களுக்கு சொல்லி மற்ற தொழிற்சாலைகள் புதுச்சேரியில் வருவதற்கு உதவி செய்வீர்கள் என்று நினைக்கிறோம். தொழில் தொடங்க முன்வரும் அவர்களுக்கு மானியம் வழங்குவது தொடர்பாக வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசி முடிவு எடுக்கப்படும். உரிமங்களை ஒற்றை சாளர முறையில் கொடுப்பதற்கும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.

Next Story