10 பவுன் நகை திருடிய பட்டதாரி பெண் கைது


10 பவுன் நகை திருடிய பட்டதாரி பெண் கைது
x
தினத்தந்தி 30 April 2022 10:58 PM IST (Updated: 30 April 2022 10:58 PM IST)
t-max-icont-min-icon

துணி தைக்க ஆர்டர் வாங்கித் தருவதாக நம்ப வைத்து அழகு நிலைய உரிமையாளரிடம் 10 பவுன் நகை திருடிய பட்டதாரி பெண் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.

துணி தைக்க ஆர்டர் வாங்கித் தருவதாக நம்ப வைத்து அழகு நிலைய உரிமையாளரிடம் 10 பவுன் நகை திருடிய பட்டதாரி பெண் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.
அழகு நிலையம்
புதுச்சேரி சண்முகாபுரம் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சரவணபவன். இவரது மனைவி லட்சுமி (வயது 43). இவர் அழகு நிலையம் நடத்தி வருவதுடன் விதவிதமான டிசைன்களில் பெண்களுக்கு  ஜாக்கெட் தைத்து கொடுக்கிறார். 
இந்தநிலையில் கடந்த மாதம் 9-ந் தேதி பகலில் 40 வயது மதிக்கத்தக்க பெண் அவரது அழகு நிலையத்திற்கு வந்து கால் பாதங்களில் இருக்கும் வெடிப்புகளை சரி செய்யுமாறு கூறினார். 
அதற்கு சிகிச்சை அளித்தபோது லட்சுமியிடம் அந்த பெண் நைசாக பேச்சு கொடுத்தார். பின்னர் அவரிடம், தான் வேலை செய்து வரும் அமைப்பு சார்பில் ஏழை மக்களுக்கு நிறைய துணிகள் தைப்பார்கள். அந்த நிர்வாகியிடம் கூறி இலவச தையல் எந்திரம் மற்றும்  நிறைய   ஆர்டர் பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதற்கு   லட்சுமி சம்மதம் தெரிவித்தார்.
உடனே அந்த பெண் அந்த அமைப்பின் நிர்வாகியை இங்கே வர சொல்கிறேன். அந்த சமயத்தில் தங்க நகைளை அணிய வேண்டாம். அதனை கழற்றி வையுங்கள் என்று கூறினார். இதை நம்பி லட்சுமி தனது கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை கழற்றி மேஜை டிராயரில் வைத்தார். செல்போனில் பேசியபடியே திடீரென அந்த நிர்வாகி வந்து விட்டார். நான் அவரை தெரு முனைக்குச் சென்று அழைத்து வருவதாக கூறிச் சென்றவர் திரும்பி வரவே இல்லை.
இந்த நிலையில் லட்சுமி தனது மேஜை டிராயரை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை காணாமல் திடுக்கிட்டார். அப்போது தான் அழகு நிலையத்துக்கு வந்த பெண் நூதனமாக நகையை திருடிச் சென்று இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
பட்டதாரி பெண்
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை வலைவீசி தேடி வந்தனர். 
அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் ஆந்திர மாநிலம் கடப்பாவை பூர்வீகமாகக் கொண்ட பட்டதாரி பெண் டெய்சி மார்ட்டின் (வயது 39) என்பவர் தான் இந்த நூதன நகை மோசடியில் ஈடுபட்டது என்பது தெரியவந்தது. தற்போது அவர் சென்னை பள்ளிக்கரணையில் வசித்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மடக்கிப் பிடித்தனர்
இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று நள்ளிரவு பள்ளிக்கரணையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த டெய்சி மார்ட்டினை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் மீது ஆந்திராவில் 20 திருட்டு வழக்குகளும், தமிழகத்தில் 6 வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் திருடிச் சென்ற நகைகளை அடகு கடையில் இருந்து போலீசார் மீட்டனர். பின்னர் கைதான டெய்சி மார்ட்டினை புதுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story