எந்த மாநிலத்திற்கும் கவர்னர் பதவி தேவையில்லை- சி.மகேந்திரன் பேட்டி


எந்த மாநிலத்திற்கும் கவர்னர் பதவி தேவையில்லை- சி.மகேந்திரன் பேட்டி
x
தினத்தந்தி 1 May 2022 6:01 AM IST (Updated: 1 May 2022 6:01 AM IST)
t-max-icont-min-icon

ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் கலந்து கொண்டு மே தின சிறப்புகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் குறித்தும் விரிவாக தனது கருத்துகளை கூறியுள்ளார்.

மேலும் தேர்தல் அரசியலை பொறுத்தவரையில் கம்யூனிஸ்டுகளுக்கு வெற்றி கிடைக்க அவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. இதுகுறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும். இளைஞர்களை தக்க வைப்பது குறித்து ஆராய வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

அகில இந்திய அளவில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திரள வேண்டிய நிர்பந்தம் உருவாகி இருப்பதாகவும், ஒரே நாளில் இது சாத்தியப்படாது என்றாலும் இது வரும் தேர்தலுக்குள் நடைபெறும் என்றும் சி.மகேந்திரன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் பேசுகையில், ‘அரசியல் தலைவர்கள் தங்கள் சுயநலத்தை மறந்து தேச நலனை கருத்தில் கொண்டு சிந்திக்க வேண்டும். மம்தா, அகிலேஷ் மற்றும் மாயாவதி போன்றவர்களின் நிலைப்பாட்டில் மாற்றம் வருகிறது’ என்று அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

தமிழகத்தை பொறுத்தவரையில் கவர்னர் அதிகாரத்தை மீறி செயல்படுவதாகவும், மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மாநில அரசுக்கு போட்டி அரசு ஒன்றை அவர் நடத்தி வருவதாகவும் கடும் விமர்சனத்தை சி.மகேந்திரன் முன்வைத்துள்ளார். கவர்னர் பதவி என்பது சுதந்திர இந்தியாவில் உருவான பதவியல்ல, இனிமேலும் இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திற்கும் கவர்னர் போன்ற பதவிகள் வேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதுதவிர சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்விகளுக்கு தனக்கே உரிய பாணியில் விரிவாகவும், விளக்கமாகவும் சி.மகேந்திரன் பேசியுள்ளார்.


Next Story