ரெயில்வே தேர்வுக்கு தமிழகத்தில் கட்டமைப்பு வசதி இல்லையா? ரெயில்வே தொழிற்சங்கங்கள் கண்டனம்
ரெயில்வே தேர்வுக்கு தமிழகத்தில் கட்டமைப்பு வசதி இல்லையா? என ரெயில்வே தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்து உள்ளது.
மதுரை,
ரெயில்வே தேர்வு வாரியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பித்த தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கான ஆன்லைன் தேர்வுகளுக்கு பிற மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பதாரர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதற்கிடையே, இந்த பிரச்சினை குறித்து சென்னையில் உள்ள ரெயில்வே தேர்வு வாரியம் விளக்கமளித்துள்ளது. அதில், ரெயில்வே துறையில் பல்வேறு பணியிடங்களுக்கான முதல்நிலை ஆன்லைன் தேர்வு 7 கட்டங்களாக நடந்தது. தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களின் கோரிக்கையின் படி, உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு தேர்வு குறித்து முழுமையான விசாரணை நடத்தியது. இதில், பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் ஒரே நேரத்தில் இந்த தேர்வை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன்படி, நாடு முழுவதும் பாரபட்சமற்ற ஒரே கேள்வித்தாள் வழங்க முடியும் என்பது விண்ணப்பதாரர்களின் எதிர்பார்ப்பு. இதனை ஏற்றுக்கொண்ட உயர்மட்ட குழுவும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்த பரிந்துரைத்தது. ஆனால், இதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால், தமிழகத்தை சேர்ந்த சிலருக்கு அருகிலுள்ள மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுத கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் நடைபெறும் இந்த தேர்வுகளில் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி பிற மாநில விண்ணப்பதாரர்களுக்கும் சொந்த மாநிலத்தில் இல்லாமல் அருகிலுள்ள மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என விளக்கமளித்துள்ளது.
இது குறித்து, டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கத்தின் மதுரை கோட்ட இணை செயலாளர் சங்கரநாராயணன் கூறும்போது,
ரெயில்வே தேர்வு வாரியம் முறைகேடு இல்லாமல் தேர்வு நடத்த முயற்சிப்பது நல்ல விஷயம் தான். ஆனால், பீகார் மாநிலத்தை சேர்ந்த விண்ணப்பதாரருக்கு கோட்டயத்தில் தேர்வு மையம் ஒதுக்கியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு இமாசல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கியுள்ளது. அனைவருக்கும் அருகிலுள்ள மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கியுள்ளதாக கூறுவது வடிகட்டிய பொய்யாகும். வங்கித்தேர்வுகள் அனைத்து மாநிலங்களிலும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளும் ஆன்லைனில் தான் நடக்கிறது.
தமிழகத்தில் சுமார் 10 லட்சம் பேர் வரை இந்த தேர்வை ஒரே நேரத்தில் எழுதுகின்றனர். எனவே, 60 ஆயிரம் பேர் ரெயில்வே தேர்வை எழுத முடியாது, கட்டமைப்பு வசதி இல்லை என்னும் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்வுக்கு சென்று வர காலதாமதம், பொருளாதார விரயம் ஏற்படுகிறது. அத்துடன், ரெயில்களில் தேர்வு எழுத செல்வதற்கு கட்டண சலுகையும் கிடையாது. நேரடி ரெயில்களே இல்லாத பகுதிகளில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தேர்வு மையத்தை தேடிச்சென்று தேர்வு எழுதுவதற்குள் கடும் மன உளைச்சலை சந்திக்க நேரிடும் என்றார்.
இது குறித்து எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தின் மதுரை கோட்ட செயலாளர் ரபீக் கூறும்போது, ரெயில்வே தேர்வு வாரியத்தின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. ஆன்லைன் தேர்வுகளை அந்தந்த மாநிலத்தில் நடத்துவதற்கு பதிலாக, பொருந்தாத காரணங்களை கூறி நிராகரிப்பதை எதிர்க்கிறோம். இதில் அரசியல் காரணங்கள் இருப்பதாக சந்தேகிக்கிறோம் என்றார்.
Related Tags :
Next Story