மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி விபத்து - வாலிபர் உயிரிழப்பு...!
நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்து உள்ளார்.
ஆரல்வாய்மொழி,
நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 24), இவரது நண்பர்கள் கோட்டாரை பதியை சேர்ந்த தினேஷ்குமார் ( 24). வடலிவிளையை சேர்ந்த ருத்திரன் ( 24).
இவர்கள் 3 பேரும் நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் உள்ள இரும்பு பட்டை தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பட்டரையில் பணி செய்யும் காவல்கிணறு பகுதியை சேர்ந்தவரின் கோவில் திருவிழாக்கு நேற்று இரவு இவர்கள் 3 பேரும் சென்றனர்.
பின்னர், இன்று காலை 12 மணியளவில் இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இவர்கள் தோவாளையை அடுத்து விசுவாசபுரம் தாண்டி செல்லும்போது எதிரே வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அப்போது உயிரிருக்கு போராடி கொண்டிருந்த மற்ற இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து அறிந்த நாகர்கோவில் துணை கண்காணிப்பாளர் நவின்குமார், ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மீனா, சப் -இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர், விபத்தில் உயிரிழந்த மணிகண்டனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து அரசு பஸ் டிரைவர் சாமுவேல் சுந்தரராஜ் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story