கார் தொழிற்சாலை மூடப்படுவதாக குற்றச்சாட்டு: ஓ.பன்னீர்செல்வம் புகாருக்கு அமைச்சர் பதில்


கார் தொழிற்சாலை மூடப்படுவதாக குற்றச்சாட்டு: ஓ.பன்னீர்செல்வம் புகாருக்கு அமைச்சர் பதில்
x
தினத்தந்தி 1 May 2022 11:07 PM GMT (Updated: 2022-05-02T04:37:17+05:30)

கார் தொழிற்சாலை மூடப்படுவதாக ஒ.பன்னீர்செல்வம் கூறிய குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகே இயங்கி வரும் நிசான் கார் தொழிற்சாலை தன்னுடைய கார் உற்பத்தியை நிறுத்தி, அத்தொழிற்சாலையை மூடப்போகும் சூழல் உருவாகி இருப்பதாகவும், அதன் காரணமாக பெருமளவில் வேலை இழப்பும், தமிழ்நாடு அரசுக்கு வருவாய் இழப்பும் நேரவிருப்பதாகவும் தெரிவித்து, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை விடுத்திருக்கின்றார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் அறிக்கை, தமிழ்நாடு அரசின் மீது ஏதாவது ஒரு வகையில் குற்றம் சுமத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதால் உண்மை நிலையினை விளக்க வேண்டியது எனது கடமையாகும்.

சிறப்பாக செயல்படுகிறது

ரெனால்ட் நிசான் நிறுவனத்திற்கு பயணிகள் கார், எரிவாயு டீசல் எஞ்சின் மற்றும் கியர் பாக்ஸ் போன்றவற்றை உற்பத்தி செய்யும் பொருட்டு தி.மு.க. ஆட்சியில்தான் 2008-ம் ஆண்டு சென்னைக்கு அருகே ஒரகடம் தொழில் பூங்காவில் சுமார் 610 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அந்நிறுவனமும் தி.மு.க. ஆட்சிப்பொறுப்பில் இருந்த காலத்திலேயே 1-1-2010 அன்று தனது வணிக உற்பத்தியினைத் தொடங்கி இன்றளவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

ரெனால்ட் நிசான் நிறுவனம் மேற்குறித்த உற்பத்தி நிலையத்தில் உள்நாட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வண்ணம் பல்வேறு ரக பயணியர் வாகனங்களைத் தயாரிப்பதோடு, உலகளவில் 15-க்கும் மேற்பட்ட ஏற்றுமதி சந்தைகளுக்குமான சேவைகளையும் வழங்கி வருகின்றது. அண்மையில் இந்நிறுவனம் தனது 50 ஆயிரமாவது மேக்னைட் எஸ்யூவி ரக காரினை வெற்றிகரமாக தயாரித்திருக்கின்றது.

ரெனால்ட் நிசான் நிறுவனம் அறிக்கை

இந்நிலையில், தனது தயாரிப்பில் உருவாகும் பல்வேறு வகையான கார்களைச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப சீர்திருத்தும் நோக்கத்துடன், டாட்சன் வகை கார்களின் உற்பத்தியைக் குறைத்துக்கொண்டு புதிய வகை கார்களை உற்பத்தி செய்யவிருப்பதாக அறிக்கை ஒன்றின் வாயிலாக ரெனால்ட் நிசான் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

உலகளாவிய சந்தை நிலவரப்படி செமி கண்டக்டர்களின் தட்டுப்பாடு நிலவி வந்தாலும், இந்நிறுவனம் தனது உற்பத்தியை சீரான நிலையில் வைத்திருப்பதாகவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கான தேவைகளை ஒரகடத்தில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களைக் கொண்டே நிறைவு செய்வதாகவும் தெரிவித்திருக்கின்றது.

எனவே, ரெனால்ட் நிசான் தொழிற்சாலை மூடப்படும் சூழல் உருவாகிடக்கூடும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கூற்று முற்றிலும் கற்பனைகளால் வடிவமைக்கப்பட்ட அனுமானமே தவிர, அடிப்படை ஆதாரமற்றதாகும். தொழிற்சாலை தொடர்ந்து இயங்கும் சூழலில், அங்கே பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் என கூறுவதும் உண்மைக்கு மாறானதாகும்.

அசைக்க முடியாத நம்பிக்கை

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் நோக்கியா செல்போன் தொழிற்சாலை மூடப்பட்டது என்பதும், பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள் என்பதும் யாராலும் மறுக்க முடியாத உண்மைகள். அது மாத்திரமல்ல, தமிழ்நாட்டில் தனது கார் தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவிட விரும்பிய கியா மோட்டார்ஸ் நிறுவனம் இறுதியில் தமிழ்நாட்டை விட்டுவிட்டு அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்திற்கு சென்று தொழில் தொடங்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டதும் அ.தி.மு.க. ஆட்சியில் தான் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை.

எனவே, முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலில், தமிழ்நாட்டில் எவ்வித குறையும் இன்றி தொழில் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியினைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன என்பதனையும்; முதல்-அமைச்சர் மீது கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாகவே உலகின் மிகப்பெரும் நிறுவனங்களின் முதலீடுகளைப் பெருமளவில் ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்திருக்கின்றது என்பதனையும் இதன் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story