ஈகை பண்பை தொடர்ந்து பேண உறுதியேற்போம் முதல் அமைச்சர் ரங்கசாமி ரம்ஜான் வாழ்த்து


ஈகை பண்பை தொடர்ந்து பேண உறுதியேற்போம் முதல் அமைச்சர் ரங்கசாமி   ரம்ஜான் வாழ்த்து
x

ஈகை பண்பை தொடர்ந்து பேண உறுதியேற்போம் என்று ரம்ஜான் வாழ்த்து செய்தியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி
ஈகை பண்பை தொடர்ந்து பேண உறுதியேற்போம் என்று ரம்ஜான் வாழ்த்து செய்தியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.

ஈகைத் திருநாள்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முதல்-அமைச்சர் ரங்கசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநில மக்களுக்கு குறிப்பாக இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது உளங்கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஈகைத்திருநாள் என்று சிறப்புடன் அழைக்கப்படும் இந்த ரம்ஜான் திருநாள் ஈகை பண்பை அனைவரிடத்திலும் வளர்ப்பதை அடிப்படையாக கொண்டது.
இல்லாதவர்களுக்கு ஒரு பொருளை கொடுத்து உதவுவதால், கொடுப்பவரும், பெறுபவரும் ஒரே நேரத்தில் மகிழ்ச்சி அடைகின்றனர். இதுதான் ரம்ஜான் நோன்பின் பயன். இதைத்தான் நோன்பு பெருநாள் தர்மம் என்று சொல்கிறோம்.
ஈகை என்ற ஒரு பண்பு உலக ஜீவராசிகள் அனைத்தையும் இன்பமுற வாழவைக்கும். எனவே இரக்க சிந்தனையையும், ஈகை பண்பையும் தொடர்ந்து பேண, இந்த புனித நன்னாளில் உறுதியேற்போம் என்று கூறி அனைவருக்கும் எனது உளம் நிறைந்த ரம்ஜான் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

லட்சுமிநாராயணன்

அமைச்சர் லட்சுமிநாராயணன்:-
புதுச்சேரி மாநில இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது ரம்ஜான் வாழ்த்துகள். ஞானத்தை நோக்கிய இஸ்லாமிய மக்களின் பாதை இனிமேல் மேலும் பிரகாசமாக்கட்டும். புனித மாதத்தின் 30 நாட்கள் நோன்பிருக்கும் அனைவரது பிரார்த்தனைகளும், இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்.
சகோதாரத்துவத்தையும், அன்பையும் வலியுறுத்தும் பண்பு மேலும் வளர்ந்து சமூக நல்லிணக்கம் வளரட்டும் என அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தேனீ.ஜெயக்குமார்

அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் :-
ரம்ஜான் எனப்படும் ஈகை திருநாளானது சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இவ்வுலகில் பரப்பும் நோக்கத்தில் உலகெங்கும் இஸ்லாமிய சகோதரர்கள் கொண்டாடும் ஒரு உன்னத பெருநாள் விழா. ரமலான் இஸ்லாமிய நாட்காட்டியின் 9-வது மாதமாகும். 
இம்மாதத்தில் உலகமெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் மத நம்பிக்கையின்படி முகமது நபிக்கு முதன்முதலாக புனித குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூரும் விதமாக இந்த நோன்பு அனுசரிக்கிறார்கள். இந்த நோன்பு இஸ்லாமிய 5 தூண்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறையை போற்றும் இந்த பெருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு என் உளமார்ந்த ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

சாய் சரவணன்குமார்

அமைச்சர் சாய் சரவணன்குமார்:-
ஈகைத்திருநாளாம் ரம்ஜான் பெருநாளில் அமைதி நிலவட்டும், அன்பு தழைக்கட்டும், மகிழ்ச்சி பெருகட்டும் என்று வாழ்த்தி புதுவை வாழ் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அமைச்சர் சந்திர பிரியங்கா
 அமைச்சர் சந்திரபிரியங்கா: இந்தியாவில் சிறுபான்மையினர் என குறிப்பிடப்பட்டாலும் பெரும்பான்மை மக்களுடன் சகோதர பாசத்துடன் பழகி நட்பு பாராட்டும் நம் இஸ்லாமிய பெருமக்களுக்கும், சகோதர சகோதரிகளுக்கும் என் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

எதிர்க்கட்சி தலைவர் சிவா

 எதிர்க்கட்சி தலைவர் சிவா: ஒழுக்கம், நல்ல பண்புகள், தர்மம், ஆன்மிக ஈர்ப்பு இதுதான் ரமலான் நோன்பு வைப்பதன் முக்கிய நோக்கமாகும். பிற நாட்களைவிட நோன்பு இருக்கும் காலத்தில்தான் மனிதன் இறைவனிடம் நெருங்கி செல்கிறான் என்பதும் இஸ்லாத்தில் உள்ளது. அந்த வகையில் இறையருளை பெறுவதற்காக புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்திக்கொண்ட புதுவை இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அன்பழகன்

புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் விடுத்துள்ள செய்தியில், ரம்ஜான் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சகோதார, சகோதரிகளுக்கும் எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சிறுபான்மையினரை அரவணைத்து நாட்டில் அமைதி, வளம், வளர்ச்சியை அடைய இந்நாளில் சபதம் ஏற்போம். சிறுபான்மை மக்களுக்கு அ.தி.மு.க. எப்போதும் துணை நிற்கும் என்றார்.

Next Story