சமஸ்கிருத சர்ச்சை விவகாரம்: இப்போகிரெடிக்-சரக் சபத் உறுதிமொழியில் கூறியிருப்பது என்ன?


சமஸ்கிருத சர்ச்சை விவகாரம்: இப்போகிரெடிக்-சரக் சபத் உறுதிமொழியில் கூறியிருப்பது என்ன?
x
தினத்தந்தி 3 May 2022 7:31 AM IST (Updated: 3 May 2022 7:31 AM IST)
t-max-icont-min-icon

இப்போகிரெடிக் உறுதிமொழி என்பது கிரேக்க நாட்டில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இப்போகிரெடிக் என்ற மருத்துவரின் உரையாகும்.

சென்னை, 

உலகம் முழுவதும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்களது மருத்துவ படிப்பை தொடங்கும் போது, அங்கி அணிந்து உறுதிமொழி எடுப்பது வழக்கம். இந்தியா உள்பட பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் இப்போகிரெடிக் என்ற உறுதி மொழி எடுக்கப்படுகிறது. ஆனால் சீனா மற்றும் முஸ்லிம் நாடுகளில் இப்போகிரெடிக் உறுதி மொழிக்கு பதிலாக தங்களுக்கு என்று தனியாக ஒரு உறுதிமொழியை எடுக்கின்றனர்.

அமெரிக்காவில் மருத்துவ மாணவர்கள் ஆஸ்டியோபதிக் என்ற உறுதிமொழி எடுக்கின்றனர்.

இப்போகிரெடிக் உறுதிமொழி என்பது கிரேக்க நாட்டில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இப்போகிரெடிக் என்ற மருத்துவரின் உரையாகும். இந்த உரையின் தொடக்கத்தில் கிரேக்க கடவுளான அப்போலோ ஹீலர் மற்றும் எல்லா கடவுள்கள் ஆகியவற்றின் பேரிலும் சத்தியம் செய்கிறேன் என்று இருந்தது. கடந்த 1948-ம் ஆண்டு இந்த உரை மாற்றி அமைக்கப்பட்டு உலக மருத்துவ சங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்தியாவில் பல ஆண்டுகளாக இப்போகிரெடிக் என்ற உறுதிமொழியை தான் மாணவர்கள் எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய கூட்டத்தில் புதிய மருத்துவ மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்பட்டு 10 குறிப்புரைகள் வழங்கப்பட்டன.

அதில் முக்கியமாக இப்போகிரெடிக் உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரக் சபத் என்ற உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும், யோகா பயிற்சி செய்ய வேண்டும், மரக்கன்று நட வேண்டும் என்பன கூறப்பட்டு இருந்தது. இந்த சுற்றறிக்கை அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டது.

மகரிஷி சரக் சபத் உறுதிமொழி என்பது சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் வாழ்ந்த சரக் சபத் என்ற ஆயுர்வேத மருத்துவர் சமஸ்கிருத மொழியில் எழுதிய இந்திய மருத்துவ முறைகள் என்ற பதிப்பில் இருந்து வரையறுக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இந்த நூல் அக்னிவேஷா என்பவரால் எழுத்தப்பட்டு அதனை சரக் சபத் மறுபதிப்பு செய்தார். இவர் சமஸ்கிருதத்தில் புத்தகம் எழுதி இருந்தாலும், இவர் பிறந்தது காஷ்மீர் என்று நம்பப்படுகிறது. 

இவரது முழு உரையில், மருத்துவர்கள் தாடி, மீசை வைத்திருக்க வேண்டும். திருமணம் செய்து இருக்க கூடாது போன்ற கருத்துகள் இடம் பெற்று இருந்தன. இந்த பழமைவாத கருத்துகள் எல்லாம் தற்போது நீக்கப்பட்டு மகரிஷி சரக் சபத் என்ற புதிய உறுதிமொழி தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த மகரிஷி சரக் சபத் உறுதிமொழியை, தேசிய மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்த உடன் வரவேற்பும்-எதிர்ப்பும் கிளம்பியது.

குறிப்பாக மேற்கு வங்காளம் மற்றும் கர்நாடகாவில் உள்ள சில டாக்டர்கள் இப்போகிரெடிக் உறுதிமொழி தான் தொடர வேண்டும் என்பதனை வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினர். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது மகரிஷி சரக் சபத் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது தேசிய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரை தான். இது கட்டாயம் அல்ல என்று மத்திய மந்திரி விளக்கம் அளித்தார். இந்த நிலையில் தான் மதுரை மருத்துவ கல்லூரி மாணவர்கள் தமிழக அரசின் அனுமதியில்லாமல், தேசிய மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்த மகரிஷி சரக் சபத்தின் சமஸ்கிருத உறுதிமொழியை ஏற்றது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

இப்போகிரெடிக் உறுதிமொழி

ஒரு புதிய மருத்துவராக, நோயுற்றவர்களைக் கவனிப்பது, நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, வலி மற்றும் துன்பத்தை போக்குவது போன்றவற்றில் என்னால் இயன்றவரை மனித குலத்திற்கு சேவை செய்வேன் என்று உறுதியுடன் உறுதி அளிக்கிறேன். மருத்துவ பயிற்சி என்பது கணிசமான பொறுப்பைக் கொண்ட ஒரு சிறப்புரிமை என்பதை நான் அங்கீகரிக்கிறேன். மேலும் எனது பதவியை நான் தவறாக பயன்படுத்த மாட்டேன். 

நான் நேர்மை, பணிவு மற்றும் இரக்கத்துடன் மருத்துவ பயிற்சி செய்வேன். எனது நோயாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய எனது சக மருத்துவர்கள் மற்றும் பிற சக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவேன். எனது நோயாளிகளின் ஒட்டுமொத்த தீங்கு விளைவிக்கும் எதையும் நான் செய்ய மாட்டேன்.

பாலினம், இனம், மதம், அரசியல் தொடர்பு, பாலியல் நோக்குநிலை, தேசியம் அல்லது சமூக நிலைப்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு எனது கவனிப்பு கடமையை பாதிக்க நான் அனுமதிக்க மாட்டேன். மனித உரிமைகளை மீறும் கொள்கைகளை எதிர்ப்பேன், அதில் பங்கேற்க மாட்டேன். நோயாளியின் ரகசியத்தன்மையை நிலைநிறுத்துவேன். கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மூலம் மருத்துவ அறிவை மேம்படுத்த முயற்சிப்பேன்..

மகரிஷி சரக் சபத் உறுதிமொழி

படிக்கும் காலத்தில் எனது ஆசிரியர்கள் மற்றும் சக நண்பர்களுடன் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்வேன். எனது செயல் சேவை சார்ந்தது. ஒழுக்கமின்மை மற்றும் பொறாமை இல்லாதது. எனது நடவடிக்கைகளில் நான் பொறுமையாகவும், கீழ்ப்படிதலுடனும் இருப்பேன். எனது தொழிலின் விரும்பிய இலக்கை நோக்கி எனது முழு முயற்சிகளையும் அர்ப்பணிப்பேன். ஒரு மருத்துவராக, நான் எப்போதும் எனது அறிவை மனிதகுலத்தின் நலனுக்காக பயன்படுத்துவேன். 

நான் மிகவும் வேலை பளுவாக இருந்தாலும், சோர்வாக இருந்தாலும், நோயாளிகளுக்கு சேவை செய்ய நான் எப்போதும் தயாராக இருப்பேன். பணத்திற்காகவோ அல்லது சுயநலத்திற்காகவோ நான் எந்த நோயாளிக்கும் தீங்கு செய்ய மாட்டேன், காமம், பேராசை அல்லது செல்வத்தின் மீது ஆசைப்பட மாட்டேன். என் எண்ணங்களில் கூட ஒழுக்கக்கேடு வெளிப்படாது. எனது ஆடைகள் கண்ணியமானதாகவும், ஈர்க்கக்கூடியதாகவும், நம்பிக்கையைத் தூண்டுவதாகவும் இருக்கும். 

இந்த துறையில் சமீபத்திய முன்னேற்றங்களை புதுப்பித்துக்கொள்ள நான் தொடர்ந்து முயற்சிப்பேன். பெண் நோயாளிகளுக்கு உறவினர்கள் அல்லது உதவியாளர்கள் முன்னிலையில் சிகிச்சை அளிப்பேன். ஒரு நோயாளியை பரிசோதிக்கும்போது,​ எனது விருப்பமும், கவனமும், புலன்களும் நோயைக் குணப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். நோயாளி அல்லது குடும்பம் தொடர்பான ரகசியத்தன்மையை வெளியிடமாட்டேன்.


Next Story