தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 4 May 2022 4:39 AM IST (Updated: 4 May 2022 4:39 AM IST)
t-max-icont-min-icon

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. ஓரிரு இடங்களில் வெயிலின் தாக்கம் அடுத்த 2 நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அக்னி நட்சத்திரம் என்ற கத்தரி வெயில் இன்று (புதன்கிழமை) முதல் தொடங்க உள்ளது.

இந்தநிலையில், இன்று முதல் 7-ந்தேதி வரையிலான 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தெற்கு அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக 4-ந்தேதி (இன்று), 5-ந்தேதி (நாளை), 6-ந்தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 5-ந்தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

7-ந்தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய (கடலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை) மாவட்டங்கள், காரைக்கால், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய (ஈரோடு, கரூர், மதுரை) மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

காற்றழுத்த தாழ்வு பகுதி

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 4-ந்தேதி உருவாகக்கூடும். இதன் காரணமாக 6-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக 4-ந்தேதி, அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

5-ந்தேதி, அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

6-ந்தேதி, அந்தமான் கடல், தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

7-ந்தேதி, வடக்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 60 கி.மீ. முதல் 70 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 80 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எமெராலட்-நெடுங்கல்லில் 3 செ.மீ. மழை

நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள எமெராலட், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நெடுங்கல்லில் தலா 3 செ.மீ. மழை அதிகபட்சமாக பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக மேட்டூர், மாரண்டஹள்ளி, ராயகோட்டையில் தலா 2 செ.மீ., கிருஷ்ணகிரி, எடப்பாடி, பரூர், கேட்டி, கூடலூர் பஜார், கோபிசெட்டிபாளையம், மேட்டுப்பாளையம், அவலஞ்சே, தேன்கனிக்கோட்டை மற்றும் நடுவட்டத்தில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Next Story