4 வயது குழந்தைக்கு கண்ணில் புற்றுநோய் - சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் பெற்றோர்கள்...!
குழந்தையின் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் பெற்றோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து உள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள உஸ்தலப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது30). இவரது மனைவி துளசி (27) .இவர்களுக்கு திருமணமாகி 7 வயதில் ஆண் குழந்தையும், 4 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.
இவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது,
இங்களது பெண் குழந்தைக்கு கடந்த இரண்டு வருடம் முன்பு கண்ணில் நீர் வழிந்த வண்ணம் இருந்தது. இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. பெங்களூரு தனியார் மருத்துவமனை பரிசோதித்த போது எங்கள் மகளுக்கு கண்ணில் புற்றுநோய் இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை செய்த நிலையில், குழந்தைக்கு குணமாகவில்லை.
மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமெனவும் அதற்கு, ரூ.5 லட்சம் செலவாகும் எனவும் கூறினர். ஏற்கனவே பல லட்சங்கள் செலவழித்த நிலையில் கூலி வேலை செய்யும் எங்களால் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை.
இதையடுத்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்று வாரம் ஒரு முறை குழந்தைக்கு ஊசி போட்டு வருகிறோம். அங்கு சென்று வருவதற்கு கூட வசதியில்லாததால் சிரமப்பட்டு வருகிறோம். தமிழக அரசு எங்கள் நிலையை உணர்ந்து எங்கள் மகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முன்வரவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story