தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது


தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 5 May 2022 10:06 AM IST (Updated: 5 May 2022 10:29 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.

சென்னை,

தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்  தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது. மொத்தம் 3,119 மையங்களில் நடைபெற்று வரும் இந்தத் தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். வருகிற 28-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.

காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடையும். மாணவர்கள் காலை 9.45 மணிக்குள் தேர்வறையில் இருக்க வேண்டும் அறிவிக்கப்பட்டு இருந்தது.  அதன்படி, தேர்வு மையங்களில் காலை 9.45 மணிக்கு முதல் மணி அடிக்கப்பட்டது. அந்த நேரத்தில் தேர்வர்கள் தேர்வறைக்கு  வந்தனர்.  அதைத்தொடர்ந்து 9.55 மணிக்கு 2-வது மணி 2 முறை அடிக்கப்பட்ட உடன், அறை கண்காணிப்பாளர் வினாத்தாள் உறைகளைப் பிரித்தனர்.  காலை 10 மணிக்கு 3-வது மணி 3 முறை அடிக்கப்பட்டது.  அப்போது மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது. 

வினாத்தாளை மாணவர்கள் காலை 10 மணியில் இருந்து 10.10 மணி வரை படித்து பார்க்கவேண்டும் என்று கல்வித்துறை கூறி இருக்கிறது.அதன் பின்னர் காலை 10.10 மணிக்கு 4-வது மணி 4 முறை அடிக்கப்படும்போது, மாணவர்களுக்கு விடைத்தாள்கள் வழங்கப்படும். தொடர்ந்து 10.15 மணிக்கு 5-வது மணி 5 முறை அடிக்கப்படும். 

அந்த நேரத்தில் தேர்வு எழுத தொடங்கலாம். பிற்பகல் 1.10 மணிக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்படும். அப்போது விடைத்தாள்களை நூல் கொண்டு கட்டவேண்டும். பிற்பகல் 1.15 மணிக்கு தேர்வு நிறைவுபெற்றதற்கான நீண்ட மணி அடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story