இலங்கை மக்களுக்கு உதவ திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நிதியுதவி
இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை செய்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.
இதற்கான மத்திய அரசின் அனுமதியும் கிடைத்துள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
இந்த சூழலில் நெருக்கடி நிலையில் இருக்கும் இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக சார்பில் வழங்கப்படும் ஒரு கோடி ரூபாய் நிதிக்கான காசோலையை நேற்று வழங்கினார்.
இந்நிலையில், முதல்-அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவ திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என்று திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story