5 வயது வரை இலவச பயணம், இருவழிப் பயணத்துக்கு 10% சலுகை: போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு
தற்போது 3 வயது வரை குழந்தைகள் கட்டணம் இன்றி பயணிக்கும் நிலையில் 5-வயது வரை கட்டணம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்துறை மீதான மானியக் கோரிக்கைகள் மீது விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:
தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை, பண பரிவர்த்தனையற்ற பயணச்சீட்டு முறையினை ரூ.70 கோடி செலவில் அறிமுகப்படுத்தப்படும். பயண கட்டண சலுகை அனுமதி சீட்டுகளை பெறுவதற்காக பயணம் மேற்கொள்வதை குறைக்கவும், எளிதாகவும், வசதியானதாகவும் பயணச் சீட்டுகள் பெறுவதற்கு அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களின் வலைதளம் அல்லது இ-சேவை மையம் வாயிலாக இணையதள பயணச்சீட்டு வழங்கும் ஏற்பாட்டு முறை அறிமுகப்படுத்தப்படும்.
சென்னை, திருச்சி மற்றும் விழுப்புரத்தில் உள்ள அரசு தானியங்கி பணிமனைகளை நவீனமயமாக்குதல் மற்றும் தரம் உயர்த்துதல் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக ரூ.70.73 லட்சம் செலவிடப்படும். பஸ்களின் வருகை, புறப்பாடு குறித்த நிகழ்நேரத் தகவல்கள் மதுரை மற்றும் கோவை நகரங்களில் மொத்தம் 16 பஸ் முனையங்களில் இணையவழி தகவல் அமைப்பு மூலமாக காட்சிப்படுத்தப்படும். விழா நாட்கள் நீங்கலாக இதர நாட்களில், இணையவழிப் பயணச்சீட்டு முன்பதிவு வாயிலாக இருவழிப் பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
தற்போது, 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பஸ்களிலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story