இயக்குனர் அலுவலகம் முற்றுகை டீசல் மானிய புத்தகத்தை திரும்ப ஒப்படைத்து மீனவர்கள் போராட்டம்
மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள் டீசல் மானிய புத்தகத்தை திரும்ப ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி
மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள் டீசல் மானிய புத்தகத்தை திரும்ப ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டீசல் மானியம்
புதுவையில் விசைப்படகு மீனவர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.15 வரை மானியம் வழங்கப்பட்டது. இந்த மானியத்தொகை கடந்த நவம்பர் மாதம் முதல் வழங்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் மீன்வளத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய மீனவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கவர்னர், முதல்-அமைச்சர் ஆகியோரிடம் மனுவும் வழங்கினர். அப்போது மே மாதம் 5-ந்தேதிக்குள் டீசல் மானியம் வழங்கப்படும் என்று மீன்வளத்துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.
மீனவர்கள் ஆலோசனை
இதைத்தொடர்ந்து மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து டீசல் மானியம் தொடர்பாக கேட்டுள்ளனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் மானியம் தொடர்பாக உறுதி எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டதாக தெரிகிறது.
இந்தநிலையில் மீனவர்கள் தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் ஒன்றுகூடி டீசல் மானியம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். அப்போது டீசல் மானியம் வழங்காததை கண்டித்து டீசல் மானிய புத்தகத்தை மீனவளத்துறையிடம் ஒப்படைப்பது என்று முடிவு செய்தனர்.
அடுத்த கட்ட போராட்டம்
இதைத்தொடர்ந்து மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அவர்கள் மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜியை சந்தித்து தங்களது டீசல் மானிய புத்தகத்தை திரும்ப ஒப்படைத்தனர்.
அதன்பின்னர் மீனவர்கள் நிருபர்களிடம் கூறுகையில் ‘அரசு டீசல் மானியம் வழங்காத நிலையில் டீசல் மானிய புத்தகத்தை திரும்ப ஒப்படைத்துள்ளோம். கடந்த காலங்களில் மீனவர்களின் கோரிக்கைகளுக்காக முழுஅடைப்பு உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். வருகிற 9-ந்தேதி வரை காத்திருப்போம். அதன்பின் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வோம்’ என்றனர்.
Related Tags :
Next Story