அனைத்து மனங்களும் குளிரும் வகையில் பட்டின பிரவேசம் தொடர்பாக முதல்-அமைச்சர் முடிவு எடுப்பார்


அனைத்து மனங்களும் குளிரும் வகையில் பட்டின பிரவேசம் தொடர்பாக முதல்-அமைச்சர் முடிவு எடுப்பார்
x
தினத்தந்தி 6 May 2022 10:02 PM GMT (Updated: 6 May 2022 10:02 PM GMT)

‘‘பட்டின பிரவேசம் பல்லக்கு தூக்கும் நிகழ்வு தொடர்பாக அனைத்து மனங்களும் குளிரும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்’’ என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தலைமையிட அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கு வாக்கி-டாக்கிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.

நிகழ்ச்சியின் போது அமைச்சர் பேசியதாவது:-

மொத்தம் 8,934 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிகளை கண்காணித்திடவும் பணிகளை விரைந்து செயல்படுத்தவும் முதற்கட்டமாக தலைமையிட அலுவலர்களுக்கும், மண்டல இணை ஆணையர்களுக்கும், செயற்பொறியாளர்களுக்கும், மாவட்ட உதவி ஆணையர்களுக்கும் 100 வாக்கி-டாக்கி வழங்கப்பட்டது.

ஊன்றுகோலாக அமையும்

கோவில் சொத்துகளை பார்வையிடுதல், அளவீடு செய்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் பணிகளை செம்மையாக செய்திடவும், கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும், கோவில் பாதுகாப்பு பலப்படுத்துதல் போன்ற துறையின் இதர செயல்பாடுகளை விரைவாக மேற்கொள்ளும் பொருட்டு உதவி ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் வட்டாட்சியர்களுக்கும் மற்றும் முதுநிலை கோவில்களில் பணியாற்றும் உதவி பாதுகாப்பு அலுவலர்களுக்கும், செயல் அலுவலர்களுக்கும் 2-ம் கட்டமாக வழங்கப்பட உள்ளது.

வாக்கி-டாக்கி வழங்கும் திட்டம் துறையின் செயல்பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும் பெரும் ஊன்றுகோலாக அமையும்.

மனங்கள் குளிரும் வகையில்...

பட்டின பிரவேசம் பல்லக்கு தூக்கும் நிகழ்வு தொடர்பாக அனைத்து மனங்களும் குளிரும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்.

அயோத்யா மண்டப விவகாரத்தில் கோர்ட்டு தீர்ப்புபடி இத்துறை செயல்படும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அர்ச்சகர்கள் சில பக்தர்களிடம் பணம் பெற்று கொண்டு சுவாமி தரிசனம் செய்ய அனுமதிப்பதாக புகார்கள் வரபெற்றுள்ளது. அதன் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மோர், எலுமிச்சை பானம்

கோடை வெயில் தாக்கத்திலிருந்து பக்தர்களை பாதுகாக்க சுகாதாரமான குடிநீர், மோர் மற்றும் எலுமிச்சை பானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் திருமகள், ஹரிப்ரியா மற்றும் தலைமையிட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story