புதர்மண்டிய சங்கராபரணி ஆறு சீரமைக்கப்படுமா?


புதர்மண்டிய சங்கராபரணி ஆறு சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 7 May 2022 8:41 PM IST (Updated: 7 May 2022 8:41 PM IST)
t-max-icont-min-icon

புதர்மண்டி கிடக்கும் சங்கராபரணி ஆற்றை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதர்மண்டி கிடக்கும் சங்கராபரணி ஆற்றை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்கராபரணி ஆறு
புதுவை மாநிலத்தின் மிகப்பெரிய நீராதாரமாக சங்கராபரணி ஆறு உள்ளது. இந்த ஆறானது புதுவை பகுதிக்குள் 34 கி.மீ. தூரம் ஓடுகிறது.
இந்த ஆற்றிலிருந்து வரும் தண்ணீரின் மூலம் புதுவையின் மிகப்பெரிய ஏரியான ஊசுட்டேரியும் நிரம்புகிறது. அதுமட்டுமின்றி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள படுகை அணைகளின் மூலம் பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயருகிறது. இந்த ஆற்று தண்ணீர் மூலம் தமிழக பகுதியில் 2 ஆயிரத்து 200 ஏக்கரும், புதுச்சேரி பகுதியில் 1,000 ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின்போது ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
முள் மரங்கள்
இதனால் ஆற்றின் குறுக்கே பிரெஞ்சு காலத்தில் கட்டப்பட்ட செல்லிப்பட்டு படுகை அணை உடைந்தது. வில்லியனூர் ஆரியபாளையத்தில் பாலத்துக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கரையோரம் இருந்த மரங்கள், செடிகள் வேரோடு அடித்து செல்லப்பட்டன.
அவை ஆற்றுக்குள் இருந்த முள்மரங்களில் சிக்கியிருந்தன. தற்போது அவையெல்லாம் காய்ந்து சருகாக காட்சி அளிக்கிறது.
சீரமைக்க வேண்டும்
ஆற்றின் நடுப்பகுதிகளில் முள் மரங்கள் பெரிய அளவில் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. அவை ஆற்றின் நீரோட்டத்தையே மாற்றிவிடும் அளவுக்கு உள்ளன. தற்போது ஆற்றில் பெருமளவு தண்ணீர் ஓட்டம் இல்லாத நிலையில் ஆற்றில் மராமத்து பணிகளை மேற்கொண்டு கடந்த கால வெள்ளத்தால் சேதமடைந்த கரைப்பகுதிகளையும் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story