மயிலாப்பூர்: ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்தவர் உயிரிழப்பு...!
சென்னை மயிலாப்பூரில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்தவர் உயிரிழந்துள்ளார்.
சென்னை,
சென்னை மயிலாப்பூர் ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் 259 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்க உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 29-ந்தேதி ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினர்.
இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டு வந்தது. பொதுமக்களின் எதிர்ப்பை மீறி படிப்படியாக வீடுகள் இடிக்கப்பட்டு வரும் நிலையில் குடியிருப்பினரும் விடாப்பிடியாக உள்ளனர். தற்போது வரை 150-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.
அந்த பகுதியில் வசித்து வரும் கண்ணையா (வயது 55) பழக்கடை நடத்தி வருகிறார். இவர், தனது வீட்டை இடித்து விடுவார்களோ? என்ற அச்சத்தில் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று வழக்கம்போல் அதிகாரிகள் வீடுகளை இடிக்க வந்தபோது கண்ணையா திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் அலறி துடித்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து ஆம்புலனஸ் மூலம் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் கண்ணையா மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு 92 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், பலத்த தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கண்ணையா சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். கண்ணையா உயிரிழந்ததையடுத்து அவரின் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story