வாடகைக்கு இருந்த வீட்டில் போதை விருந்து - தட்டி கேட்ட உரிமையாளர் உட்பட 8 பேருக்கு அரிவாள் வெட்டு...!
போதை விருந்து நடத்தியதை கண்டித்த வீட்டு உரிமையாளரை அரிவாளால் வெட்டிய இளைஞர்கள் சாலையில் சென்றவர்களையும் அரிவாளால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை,
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பி.டி. காலனியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது வீட்டின் அருகே உள்ள வீடுகளை இளைஞர்கள் சிலருக்கு வாடகைக்கு விட்டு உள்ளார். அதில் ஒரு வீட்டில் பனியன் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் நெல்லையை சேர்ந்த சிவா என்பவர் தங்கி உள்ளார்.
போதை விருந்து
இவர் தனது பிறந்த நாளையொட்டி நண்பர்களான ஹரிஹரன், முத்துவேல், சங்கர், ராஜா, முருகன் ஆகியோருக்கு விருந்து வைத்துள்ளார். அப்போது அவர்கள் மது குடித்து விட்டு போதையில் கூச்சல் போட்டதாக தெரிகிறது.
கண்டித்ததால் ஆத்திரம்
இதை வீட்டின் உரிமையாளரான சண்முகசுந்தரம் கண்டித்து உள்ளார். இதையடுத்து சிவா நேற்று நெல்லைக்கு சென்று விட்டார். ஆனால் அந்த அறையில் அவருடைய நண்பர்கள் 5 பேரும் போதை மயக்கத்தில் இருந்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் 5 பேரும் அரிவாள், கத்தி கம்பு போன்ற ஆயுதங்களுடன் சண்முகசுந்தரம் வீட்டுக்கு வந்து தகராறு செய்தனர். பின்னர் ஆத்திரம் அடைந்த அவர்கள் சண்முக சுந்தரம், அவருடைய மனைவி பூர்ணிமா ஆகியோரை தாக்கினர்.
அரிவாள் வெட்டு
உடனே பக்கத்து வீட்டை சேர்ந்த ஷ்யாம் தடுக்க முயன்றார். அவரையும் அந்த கும்பல் துரத்தி துரத்தி சரமாரியாக அரிவாளால் வெட்டினர். மேலும் வெறி அடங்காத அந்த கும்பல் வீதியில் அரிவாளுடன் சுற்றி பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்தனர்.
அப்போது அந்த வழியாக சாலையில் வந்த அபி, சசி, பிருந்தா, தர்ணிகா ஆகியோரையும் தாக்கினர். மேலும் அங்கு வந்த முன்னாள் கவுன்சிலர் முத்துலட்சுமியை தாக்கி அரிவாளால் வெட்ட முயன்றனர். ஆனால் அவர் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார்.
வீடு, கார் சேதம்
இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் அவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், கார், இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இது குறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உடனே அந்த 5 பேர் கும்பல் தப்பி ஓடத் தொடங்கியது.
ஆனால் பொதுமக்கள் விடாமல் துரத்தி சென்றனர். உடனே அவர்கள் தென்றல் நகரில் உள்ள தென்னந்தோப்புக்குள் பதுக்கினர். ஆனால் பொது மக்கள் அவர்கள் 5 பேரையும் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
5 பேர் கும்பல் கஞ்சா போதையில் 8 பேரை அரிவாளால் வெட்டி பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களை ஓட ஓட விரட்டி வெட்டிய போதை இளைஞர்கள் - ரவுண்டு கட்டி புரட்டி எடுத்த ஊர்மக்கள்https://t.co/0orzIdtxpD#Coimbatore#DrugAddiction#TNPolice
— Thanthi TV (@ThanthiTV) May 9, 2022
Related Tags :
Next Story