தீக்குளித்து உயிரிழந்த கண்ணையா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்து உயிரிழந்த கண்ணையா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அப்பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அந்த பகுதியில் வசித்து வரும் கண்ணையா என்பவர் வீடுகளை இடிக்க வந்தபோது தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கண்ணையா சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில், சென்னை ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்து உயிரிழந்த கண்ணையா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.
இது குறித்து முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது:-
ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்து உயிரிழந்த கண்ணையா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். ஆக்கிரம்பிப்புகளை அகற்றும் விவகாரத்தில் ஆர்.ஏ புரம் உயிரிழப்பே கடைசியாக இருக்க வேண்டும்.
மந்தவெளி, மயிலாப்பூர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் கட்டி வரும் வீடுகளில், ஆர்.ஏ.புரம் மக்கள் மறு குடியேற்றம் செய்யப்படுவர்.
வரும் காலங்களில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டிய தேவை ஏற்படின், மறு குடியேற்றம் தொடர்பாக முன்கூட்டியே சம்மந்தப்பட்ட மக்களுடன் கலந்தாலோசித்து, மறு குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து மறு குடியமர்வு கொள்கை விரிவாக உருவாக்கப்படும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story