கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளை முயற்சி; ரோந்து சென்ற போலீசால் நகை, பணம் தப்பியது..!
ஊத்தங்கரை அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளையடிக்க முயற்சித்த மர்ம கும்பல் ரோந்து போலீசாரை கணடு தப்பியோடியதால் ரூ.3 கோடி மதிப்பிலான நகை, பணம் தப்பியது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே சாமல்பட்டி & காரப்பட்டு சாலையில் உள்ள குன்னத்தூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இக்கூட்டுறவு சங்கத்தில் சுற்றுவட்டார கிராம மக்கள், விவசாயிகள் தங்களது நகைகளை அடகு வைத்து கடன்களை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை சாமல்பட்டி காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கூட்டுறவு கடன் சங்கத்தின் அலுவலக பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட போலீஸார் கூட்டுறவு கடன் சங்கம் அருகே சென்றனர். அங்கிருந்த மர்ம நபர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பியோடினர்.
இதுதொடர்பாக காவல் நிலையத்திற்கு போலீசார் தகவல் அளித்தனர். விசாரணையில், அதிகாலை 2 மணியளவில் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு வந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
நுழைவுவாயிலில் இருந்த கண்காணிப்பு கேமராவினை திருப்பி வைத்தும், அங்கிருந்த அலாரத்தின் ஒயரையும் துண்டித்தனர். மின் விளக்குகள் அணைக்கப்பட்டு, அலுவலகத்தின் உள்ளே இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து, கம்ப்யூட்டருக்கு செல்லும் ஒயர்களையும் துண்டித்தனர்.
தொடர்ந்து அங்குள்ள லாக்கரை, அவர்கள் கொண்டு வந்த கட்டபாரை மற்றும் வெல்டிங் மெஷினை கொண்டு உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ரோந்து போலீஸார் டார்ச்லைட் வெளிச்சத்தை கண்டதும் தப்பியோடியது தெரியவந்தது.
இதனால் கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்த ரூ-.3 கோடி மதிப்பிலான நகைகள், ரூ.5 லட்சம் தப்பியது. மேலும், மர்ம நபர்கள் விட்டுச் சென்ற வெல்டிங் மெஷின், இரும்பு கம்பிகளை போலீஸார் கைப்பற்றினர். மேலும், கைரெகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த, போலீஸார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story