ஜிப்மரில் இந்தி திணிப்பை கைவிட வேண்டும்
ஜிப்மர் இந்தி திணிப்பை கைவிட வேண்டும் என்று வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
ஜிப்மர் இந்தி திணிப்பை கைவிட வேண்டும் என்று வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
ஜிப்மர்
புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் கீழ் இருந்தால் உலகத்தரத்தில் சிகிச்சை கிடைக்கும் என்பதற்காக புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனை தொடங்கப்பட்டது. அதன்படி ஜிப்மரில் தரமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் புதுச்சேரி மக்கள் பயன் பெற்று வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஜிப்மரில் சிகிச்சைக்கு செல்லும் புதுச்சேரி மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக தற்போது மத்திய அரசின் இந்தி திணிக்கும் பணியை ஜிப்மர் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதாவது ஜிப்மர் இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தற்போது ஜிப்மர் அலுவலக மொழி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருப்பதாகவும், வரும் காலத்தில் இந்தியில் மட்டுமே இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார். இதன் மூலம் ஜிப்மர் மருத்துவமனை தரமான சிகிச்சை அளிக்கும் நோக்கத்தில் இருந்து விலகி இந்தி திணிக்கும் பணியை கையில் எடுத்துக் கொண்டுள்ளது. இதனை கைவிட வேண்டும்.
திரும்ப பெற வேண்டும்
வரும் காலங்களில் ஜிப்மர் பணிக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்பதை கட்டாயத்திற்குள்ளாக்கி இந்தி மொழி மாநிலத்தவர்களை மட்டுமே ஜிப்மர் மருத்துவமனையில் பணிக்கு கொண்டுவர மத்திய அரசும், ஜிப்மர் நிர்வாகமும் முயற்சித்து வருவதாக தெரிகிறது. அவ்வாறு உள்ளூர் மக்களை புறக்கணித்து வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களை மட்டும் பணியில் அமர்த்தினால் அது கலவரத்திற்கும், மோதலுக்குமே வழி வகுக்கும்.
எனவே ஜிப்மர் நிர்வாகம் உடனடியாக எதிர்காலத்தில் அலுவலக மொழியாக இந்தி மட்டுமே என்ற சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டும். இல்லையெனில் இந்தி திணிப்புக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டங்கள் அனைத்திற்கும் ஜிப்மர் நிர்வாகமே பொறுப்பு ஏற்க வேண்டியிருக்கும். மக்களின் நியாயாமான போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி எம்.பி., என்ற முறையில் நான் முழு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்பேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story