ஆக்கிரமிப்பு இடங்களுக்கு ஏற்ப அடிக்காசு வசூல்


ஆக்கிரமிப்பு இடங்களுக்கு ஏற்ப அடிக்காசு வசூல்
x
தினத்தந்தி 9 May 2022 11:10 PM IST (Updated: 9 May 2022 11:10 PM IST)
t-max-icont-min-icon

சண்டே மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு இடங்களுக்கு ஏற்ப அடிக்காசு வசூலிக்கப்படுவதாக புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார் விளக்கமளித்துள்ளார்.

சண்டே மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு இடங்களுக்கு ஏற்ப அடிக்காசு வசூலிக்கப்படுவதாக புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார் விளக்கமளித்துள்ளார்.
புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சதுர மீட்டருக்கு ரூ.10 வசூல்
புதுவை நகராட்சி நிர்வாகம் காந்தி வீதியில் சண்டே மார்க்கெட் வியாபாரத்திற்காக அடிக்காசு கட்டணத்தை புதிதாக எதுவும் உயர்த்தவில்லை. இதுவரை வசூலித்து வந்த கட்டணமே இந்த ஆண்டும் வசூலிக்கப்படுகிறது. வியாபாரிகள் சாலையில் கடை வைத்துள்ள பரப்பளவு கணக்கிடப்பட்டு சதுர மீட்டருக்கு ரூ.10 மட்டுமே ஒரு நாளுக்கு வசூலிக்கப்படுகிறது.
ஒரு சதுரமீட்டர் என்றால் சுமார் 11 சதுர அடி பரப்பளவாகும். வியாபாரிகள் கூடுதலாக இடத்தை ஆக்கிரமித்து இருந்தால் ஒவ்வொரு கூடுதல் சதுரமீட்டருக்கும் ரூ.10 அடிக்காசு கூடுதலாக செலுத்த வேண்டும். ஒருவர் 3 சதுரமீட்டர் அளவு இடத்தை ஆக்கிரமித்து இருந்தால் அவர் 30 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும்.
வியாபாரிகள் புகார்
ஆனால் பெரிய அளவில் கடை வைத்துள்ளவர்களும் ரூ.10 மட்டுமே தர முடியும் என கூறி அடிக்காசு வசூலுக்கு சண்டே மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு தீர்வுகாணும் வகையில் நகராட்சி நிர்வாகம் காவல்துறை உதவியுடன் கடைகளை அளந்து பரப்பளவுக்கு ஏற்ப வசூல் செய்யும்போது சாலைமறியல் போராட்டம் செய்தனர். 
மேலும் நகராட்சிக்கு அடிக்காசு கட்டணம் செலுத்த மறுக்கும் வியாபாரிகள், சங்க நிர்வாகிகள் பலர் இடத்தை பிடித்து அதனை சென்னை போன்ற வெளியூர்களில் இருந்து வரும் வியாபாரிகளிடம் உள்வாடகைக்கு விட்டு நாள் ஒன்றுக்கு ரூ.1,000 முதல் ரூ.5 ஆயிரம் வரை வாடகை பெற்று வருவதாக புகார் வருகிறது. பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக சாலை சந்திப்புகளிலும் கடை பரப்பி வியாபாரம் செய்கின்றனர்.
தவறான தகவல்
இவர்கள்தான் அடிக்காசு தொகையை நகராட்சி உயர்த்திவிட்டதாக தவறான தகவலை பரப்பி சாலைமறியல் போராட்டம் என்ற போர்வையில் பொதுமக்களுக்கும், நகராட்சி நிர்வாகத்துக்கும் இடையூறு செய்கின்றனர். ஆகவே அனைத்து சண்டே மார்க்கெட் வியாபாரிகளும் அடிக்காசு தொகையாக ஒரு சதுரமீட்டருக்கு ரூ.10 செலுத்தி நகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story