சென்னையில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த பா.ம.க. நிர்வாகி சாவு


சென்னையில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த பா.ம.க. நிர்வாகி சாவு
x
தினத்தந்தி 9 May 2022 9:00 PM GMT (Updated: 9 May 2022 9:00 PM GMT)

ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த பா.ம.க நிர்வாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை,

சென்னை மயிலாப்பூர் ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 29-ந்தேதி முதல் வீடுகளை இடிக்கும் பணி அதிகாரிகளால் தொடங்கப்பட்டது. இதை எதிர்த்து அந்தப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி படிப்படியாக வீடுகள் இடிக்கப்பட்டு வந்தன.

இந்தநிலையில் அதே பகுதியில் வசித்து வந்த பா.ம.க. நிர்வாகியான கண்ணையா (வயது 55) தனது வீட்டை இடிப்பது குறித்து ஏற்பட்ட அச்சத்தில் மன உளைச்சலில் இருந்து வந்தார். இதையடுத்து மீதமிருந்த வீடுகளை நேற்று முன்தினம் அரசு அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கண்ணையா திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

உயிரிழப்பு

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு 92 சதவீத உடல் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட கண்ணையாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த கண்ணையா நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை ஆர்.ஏ.புரம் பகுதி மக்கள் பசுமை வழிச்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து போலீஸ் இணை கமிஷனர் பிரபாகரன், துணை கமிஷனர்கள் தீபா மித்தல், மகேந்திரன், பகலவன் தலைமையில் ஏராளமான போலீசார் போராட்டம் நடந்த பகுதியில் குவிக்கப்பட்டனர்.

கோரிக்கை

மேலும், பொதுமக்கள் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும், சட்டையில் கருப்பு பட்டை அணிந்தும், சாலையோரம் அமர்ந்து உணவு சமைத்தும் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து தீக்குளித்து உயிரிழந்த கன்ணையாவின் மகன் சுரேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

என் தந்தை உயிரிழந்தது இந்த பகுதி மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காகதான். இதில் எந்த அரசியலும் இல்லை. எங்களது கோரிக்கை இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இதே பகுதியில் பட்டா செய்து கொடுங்கள். வீடுகளை அகற்றும்போது மக்களிடம் வரம்பு மீறி பேசி, அவதூறாக நடந்து கொண்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story