கொல்லப்பட்ட தொழில் அதிபர், மனைவியின் தலையில் மண்வெட்டியால் வெட்டிய காயம்


கொல்லப்பட்ட தொழில் அதிபர், மனைவியின் தலையில் மண்வெட்டியால் வெட்டிய காயம்
x
தினத்தந்தி 10 May 2022 5:22 AM IST (Updated: 10 May 2022 5:22 AM IST)
t-max-icont-min-icon

நகை, பணத்துக்காக கொல்லப்பட்ட சென்னை தொழில் அதிபர் மற்றும் அவரது மனைவியின் உடலில் மண்வெட்டியால் வெட்டிய காயம் இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

செங்கல்பட்டு,

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த தொழில் அதிபர் ஸ்ரீகாந்த் மற்றும் மனைவி அனுராதா ஆகியோர் அவர்களது வீட்டில் வேலை பார்த்து வந்த டிரைவர் கிருஷ்ணா மற்றும் அவரது கூட்டாளி ரவிராய் ஆகியோரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் உடல்களை கார் மூலம் எடுத்துச்சென்று மாமல்லபுரம் அருகே சூளேரிக்காட்டில் உள்ள பண்ணை வீட்டில் புதைத்துவிட்டு சுமார் ஆயிரம் பவுன் நகையுடன் காரில் நேபாளம் தப்பி செல்ல முயன்ற 2 கொலையாளிகளும் அதிரடியாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே பண்ணை வீட்டில் புதைக்கப்பட்ட தம்பதியின் உடல்கள் போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதபரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் ஸ்ரீகாந்தின் தம்பி சீனிவாசன் தரப்பில் மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் உடல்களை ஒப்படைக்குமாறு புகார் அளிக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை

இதற்கிடையே 4 டாக்டர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு நேற்று மதியம் 1.30 மணிக்கு 2 உடல்களையும் பிரேத பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது.

இந்த பணி மாலை 4 மணிக்கு நிறைவு பெற்றது. முதல்கட்ட தகவலில் 2 பேரின் தலையிலும் மண்வெட்டியால் தாக்கி மண்டையை உடைத்தும், கழுத்தில் கத்தியால் குத்திய காயமும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகன் இன்று வருகை

தொடர்ந்து இருவரது உடல்களும் ஸ்ரீகாந்தின் தம்பியான சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சென்னை ஷெனாய் நகரில் உள்ள தனியார் பிணவறைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இதையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்காவில் வசித்து வரும் தொழில் அதிபரின் மகனும், மகளும் சென்னை வருகிறார்கள்.

அவர்கள் தந்தை, தாயின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு உடல்கள் தகனம் செய்யப்படும் என்று தெரிகிறது.

Next Story