தமிழ்நாட்டில் 12 கோவில்களில் இந்த மாதம் கும்பாபிஷேகம் - அமைச்சர் சேகர்பாபு தகவல்


தமிழ்நாட்டில் 12 கோவில்களில் இந்த மாதம் கும்பாபிஷேகம் - அமைச்சர் சேகர்பாபு தகவல்
x
தினத்தந்தி 10 May 2022 1:22 PM IST (Updated: 10 May 2022 1:22 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் 12 கோவில்களில் இந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி ஒரு மாதத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 12 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள புராதனமான மற்றும் தொன்மையான கோவில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்து புனரமைப்புப் பணிக்கான ஒப்புதலுக்கு பரிந்துரை செய்வதற்கு மாநில அளவில் மற்றும் மண்டல அளவில், வல்லுநர் குழுவின் கூட்டம் வாரம் இருமுறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்று 200க்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணிகளுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடலூர் மாவட்டம், பெரியகங்கணாங்குப்பம், சேமகளத்து மாரியம்மன் கோவில், திருநெல்வேலி மாவட்டம், மேலநத்தம், அருந்தபசு அம்மன் கோவில், தஞ்சாவூர் மாவட்டம், இரயிலடி, சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில், கோவை மாவட்டம், பாப்ப நாயக்கன்பாளையம், பட்டத்தரசியம்மன் கோவில், சிவகங்கை மாவட்டம், திருவேகம்பத்தூர் ஏகாம்பர நாதசுவாமி கோவில் ஆகிய கோவில்களுக்கு 13.5.2022 அன்றும் கும்பாபிஷேகம் நடைபெறும்.

விருதுநகர் மாவட்டம், குன்னூர் எல்லையம்மன் கோவில், விருதுநகர் மாவட்டம், வத்ராயிருப்பு நகர், கம்மாள கருப்பசாமி கோவில், காஞ்சிபுரம் மாவட்டம், கைலாசநாதர் கோவில் ஆகிய கோவில்களுக்கு 15.5.2022 அன்றும், திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் அங்காளம்மன் கோவிலுக்கு 27.5.2022 அன்றும், புதுக்கோட்டை மாவட்டம், ஆதிமத்தியார்ஜீனேஸ்வரர் கோவிலுக்கு 9.6.2022 அன்றும், திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, அழகு நாச்சியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு திருப்பணிகள் முடிவுற்று குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

இதேபோல் ஒவ்வொரு மாதமும் திருப்பணிகள் முடிவுற்ற கோவில்களுக்கு திருக்குடமுழுக்கு உடனடியாக நடந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story