மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம்..!
21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே மாநகராட்சி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை:
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பாக 500-க்கும் மேற்பட்ட மாநகராட்சி அனைத்து பிரிவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு தொழிற்சங்கம் ஆகியவை கலந்து கொண்டன.
அப்போது தினக்கூலி தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தர தூய்மைப் பணியாளர்களுக்கு 7-வது ஊதியக்குழு பணப்பலன்களை வழங்க வேண்டும், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு தினக்கூலியாக 625 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும்.
கொரோனோ காலத்தில் முன்களப்பணியில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களுக்கு அரசு அறிவித்த 15 ஆயிரம் ரூபாயை நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தின்போது மாநகராட்சி தொழிலாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், அனைத்து பிரிவு தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு பலமுறை மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை வைத்தோம். இதுவரை எதுவும் நிறைவேற்றி தரப்படவில்லை என்றார்.
Related Tags :
Next Story