ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக தமிழகத்தை சேர்ந்த 7 பேர் கைது


ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக தமிழகத்தை சேர்ந்த 7 பேர்  கைது
x
தினத்தந்தி 10 May 2022 5:41 PM IST (Updated: 10 May 2022 5:41 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திர மாநிலம் சித்தூரில் வாகன தனிக்கையில் ரூ. 3 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சித்தூர் ,

சித்தூரில் நேற்று எஸ் பி ரிசாந்த் ரெட்டி பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கையில் ,

சித்தூர் மாவட்டம் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வருவதாக நேற்று  சித்தூர் ரூரல் சர்க்கிள் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்து.இதனை அடுத்து, போலீசார் சித்தூர் - ராணிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் எம்.சி.ஆர் சர்க்கிள் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அதிவேகமாக ஒரு கார் வந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை தடுத்து நிறுத்தினர். ஆனால், கார் நிற்காமல் வேகமாக சென்றதால் பின்னால் தொடர்ந்து சென்ற போலீசார் மடக்கி பிடித்தனர்.

காரில் இருந்த இருவரை போலீசார் கைது செய்து காரை சோதனை செய்ததில் அதில் செம்மரக்கட்டைகள் இருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் காரில் இருந்த நபரை போலீசார் விசாரணை செய்ததில் பின்னால் மேலும் இரண்டு வாகனங்களில் செம்மரக்கட்டைகளை கடத்தி வரப்படுவதாக தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து போலீசார் அவ்வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்தனர். தொடர்ந்து சோதனை செய்ததில் ஒரு கார் மற்றும் மினி வேன் ஆகிய இரண்டு வாகனங்களில் செம்மர கட்டைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

2 வாகனங்களில் உள்ள 5 பேரை கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 வாகனங்கள் உள்பட 2720 கிலோ எடை கொண்ட 89 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்தனர்.  

விசாரணையில்  7 பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. கோவிந்தசாமி என்கிற சேட்டு (வயது 44),   முருகேசன் என்கிற ஞானபிரகாசம்  (50), பெருமாள் வெங்கடேஷ்  (44), கரியா ராமன் (27), குலஞ்ஜன்(36),  வெங்கடேஷ்(37),  கோவிந்தராஜ்  (21) என விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இவர்கள் 7 பேரிடம் விசாரணை செய்ததில் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த நான்கு பேரும், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரும் இவர்கள் செம்மரக்கட்டை கடத்துவதற்கு உடந்தையாக செயல்பட்டு உள்ளார்கள் என தெரிய வந்ததுள்ளது.

அவர்கள் 7 பேரும் தற்போது தலைமறைவாக இருக்கிறார்கள். அவர்கள் ஏழு பேரையும் மிக விரைவில் போலீசார் கைது செய்வார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story