தரமற்ற ஷவர்மா விற்றால் கடும் நடவடிக்கை


தரமற்ற ஷவர்மா விற்றால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 10 May 2022 10:12 PM IST (Updated: 10 May 2022 10:12 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் தரமற்ற ஷவர்மா விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


புதுச்சேரியில் தரமற்ற ஷவர்மா விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
‘ஷவர்மா’ 
கேரளாவில் கோழி இறைச்சியால் செய்யப்பட்ட ‘ஷவர்மா’ என்ற துரித உணவு சாப்பிட்ட மாணவி ஒருவர் கடந்த வாரம் உயிரிழந்தார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் ஷவர்மா சாப்பிட்ட கால்நடை மருத்துவ மாணவர்கள் 3 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். 
இந்த சம்பவங்களை தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள ஓட்டல்களில் ஷவர்மா உணவு தரத்தை அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும் என்று அரசியல் கட்சியினர், பொதுமக்கள் வலியுறுத்தினர்.
அதிகாரி ஆய்வு
இந்த நிலையில் புதுச்சேரி அரசு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையில் ஊழியர்கள் கடந்த சில நாட்களாக ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று மாலை மிஷன் வீதியில் உள்ள தனியார் ஓட்டலில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த ஷவர்மாவை சோதனை செய்தனர். பின்னர் ஓட்டல் மேலாளரிடம், ஷவர்மாவுக்காக வைக்கப்பட்டுள்ள கோழி இறைச்சி எப்போது வாங்கியது என கேள்வி எழுப்பினர். மேலும் அதற்கான பில்லை வாங்கி சரிபார்த்தனர். அப்போது அது இன்று காலையில் வாங்கப்பட்டது என்பது தெரியவந்தது.
 பின்னர் அதிகாரிகள் அங்கு இருந்த ஊழியர்களிடம் ஷவர்மாவுக்கு தினமும் கோழி இறைச்சி வாங்க வேண்டும். இரவு விற்பனை ஆகாத இறைச்சியை அடுத்த நாள் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பாக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை அவர்களிடம் வழங்கினர்.
கடும் நடவடிக்கை
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பாலகிருஷ்ணன் கூறியதாவது:- 
புதுவையில் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளில் நாங்கள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறோம். கடந்த 3 நாட்களில் 35 கடைகளில் சோதனை செய்துள்ளோம். 100 சதவீதம் வேக வைக்காத கோழி இறைச்சியை சாப்பிடும் போது அது வாடிக்கையாளர்களுக்கு உடல்நல பாதிப்பை ஏற்படுத்துகிறது. 
புதுச்சேரியில் தரமற்ற ஷவர்மா விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல் கட்டமாக ரூ.5 ஆயிரம் அபராதமும், 2-வது முறை பிடிபட்டால் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். அதற்கு மேலும் தரமற்ற ஷவர்மா விற்பனை செய்தால் சிறைக்கு செல்ல நேரிடும். உணவு பாதுகாப்பு துறையின் சோதனை தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story