10, 12-ம் வகுப்பை தொடர்ந்து பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது


10, 12-ம் வகுப்பை தொடர்ந்து பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 11 May 2022 4:30 AM IST (Updated: 11 May 2022 4:30 AM IST)
t-max-icont-min-icon

10, 12-ம் வகுப்பை தொடர்ந்து பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.

சென்னை,

கொரோனா தொற்று காரணமாக நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுகள் சற்று தாமதமாக தொடங்கி நடைபெறுகின்றன. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 5-ந் தேதியும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 6-ந் தேதியும் தேர்வு தொடங்கியுள்ளன.

அதனைத் தொடர்ந்து பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கு நேற்று பொதுத்தேர்வு தொடங்கி இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 ஆயிரத்து 119 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 85 ஆயிரத்து 53 பேர் தேர்வை எழுதுகின்றனர். இவர்களில் தமிழகத்தில் இருந்து மட்டும் 4 லட்சத்து 26 ஆயிரத்து 917 மாணவர்கள், 4 லட்சத்து 42 ஆயிரத்து 989 மாணவிகள், 2 திருநங்கைகள் என மொத்தம் 8 லட்சத்து 69 ஆயிரத்து 908 பேர் தேர்வை எதிர்கொள்கின்றனர்.

ஆர்வத்துடன் எழுதினர்

பிளஸ்-1 வகுப்புக்கான தமிழ் தேர்வு நேற்று நடந்தது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை போலவே, பிளஸ்-1 பொதுத்தேர்வும் 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடக்கிறது. அந்த வகையில் கொரோனா தொற்று பரவத்தொடங்கிய காலத்தில் 9-ம் வகுப்பு படித்தவர்கள், இப்போது பிளஸ்-1 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாமலேயே, நேரடியாக பிளஸ்-1 வகுப்பு பொதுத்தேர்வை இந்த மாணவ-மாணவிகள் எதிர்கொள்கின்றனர். இருப்பினும் மாணவ-மாணவிகள் எந்தவித பதற்றமும் இன்றி, ஆர்வத்துடன் தேர்வு எழுதியதை பார்க்க முடிந்தது. தமிழகத்தில் சில இடங்களில் நேற்று காலையில் மழை பெய்த நேரத்திலும், மாணவ-மாணவிகள் தேர்வுக்கு வந்திருந்தனர்.

எளிதாக இருந்தது

நேற்று நடந்த தமிழ் தேர்வை பொறுத்தவரையில், ‘எளிதாக இருந்ததாகவும், ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டும் புத்தகத்தின் உள் பகுதியில் இருந்தும், 2, 4 மற்றும் 6 மதிப்பெண் வினாக்கள் ஒவ்வொரு பாடத்தின் பின்பக்கத்தில் இடம்பெற்றிருந்த வினாக்களைத்தான் கேட்டு இருந்ததாகவும்' மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.

ஒரு மதிப்பெண் வினாக்கள் புத்தகத்தின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டதால், சாமர்த்தியமாக படித்தவர்களால் மட்டுமே 100-க்கு 100 மதிப்பெண்ணை பெற முடியும் என்று ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டது. முதல் நாள் நடந்த பிளஸ்-1 தமிழ் தேர்வில் சேலம், திருச்சியில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்ட தலா ஒரு மாணவர்கள் பிடிபட்டு இருப்பதாக அரசு தேர்வுத்துறை தெரிவித்து இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) பிளஸ்-1 மாணவர்களுக்கு ஆங்கில தேர்வு நடைபெற இருக்கிறது.

43 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை

பிளஸ்-1 பொதுத்தேர்வு முதல் நாளில் தமிழ் தேர்வு நடந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 85 ஆயிரத்து 53 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத இருந்தனர்.

இவர்களில் 43 ஆயிரத்து 533 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை என்று அரசு தேர்வுத்துறை வெளியிட்டு இருக்கிறது. ஏற்கனவே 12-ம் வகுப்பு முதல் நாள் தேர்வில் 32 ஆயிரம் பேரும், 10-ம் வகுப்பு முதல் நாள் தேர்வில் 42 ஆயிரம் பேரும் தேர்வுக்கு வராமல் இருந்தனர்.

தற்போது 11-ம் வகுப்பு முதல் நாள் தேர்வில் 43 ஆயிரத்து 533 பேர் தேர்வு எழுதாதது கல்வியாளர்கள், ஆசிரியர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. என்ன காரணத்துக்காக தேர்வு எழுத மாணவர்கள் வரவில்லை என்பது குறித்து கல்வித்துறை ஆய்வு நடத்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story