தொழில் வளர்ச்சிக்கு தடையில்லா மின்சாரம் மிக அவசியம் -நிர்மலா சீதாராமன் பேச்சு


தொழில் வளர்ச்சிக்கு தடையில்லா மின்சாரம் மிக அவசியம் -நிர்மலா சீதாராமன் பேச்சு
x
தினத்தந்தி 10 May 2022 11:11 PM GMT (Updated: 2022-05-11T04:41:23+05:30)

‘தொழில் வளர்ச்சிக்கு தடையில்லா மின்சாரம் மிகவும் அவசியம்' என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

சென்னை,

ஐக்கிய அரபு நாடுகள், ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மேற்கொண்டுள்ள ஏற்றுமதி மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து தொழில் நிறுவனங்களுக்கு விளக்கும் வகையிலான கலந்துரையாடல் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது.

மத்திய அரசின் வர்த்தகத்துறை இணை செயலாளரும், தமிழக அரசின் ஒருங்கிணைப்பு அதிகாரியுமான பாலாஜி வரவேற்றார்.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் குத்துவிளக்கேற்றி கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

பல ஒப்பந்தங்கள்

தொழில் நிறுவனங்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரிகளிடம் பிரதமர் நரேந்திரமோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் சவால்களை களைய மத்திய அரசு தயாராக உள்ளது.

வெளிநாடுகளுடன் ஏற்றுமதி மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்த இன்னும் பல ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளோம்.

இதுபோன்ற ஒப்பந்தங்களை தொழில் நிறுவனங்கள் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். தற்போதுள்ள மாற்றங்களுக்கு ஏற்றாற்போல் தொழில் நிறுவனங்களும் தங்களது உற்பத்தி பொருட்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

தடையில்லா மின்சாரம் அவசியம்

தொழில் வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்பு மிகவும் அவசியம் ஆகும். மாநிலங்களில் அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது. இதனை மாநில அரசுகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இதேபோன்று தொழில் வளர்ச்சிக்கு தடையில்லா மின்சாரம் அவசியம். இதனை மாநிலங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழகம் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் இதனை வலியுறுத்தி வருகிறேன். தொழிலுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புக்காக மத்திய அரசு கடந்த பட்ஜெட்டின்போது ரூ.7½ லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இது, முந்தைய பட்ஜெட்டை விட 2 லட்சம் கோடி அதிகமாகும். தொழிலுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புக்காக மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடனாக 50 ஆண்டுகள் வரை திரும்ப செலுத்தும் வகையில் வழங்கப்படுகிறது.

விளைவுகளை சந்திக்க நேரிடும்

தமிழகத்தில் சோலார் மின் உற்பத்தி போன்ற புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி பெருமளவு மேற்கொள்ளப்படுகிறது. மின்சார தடை என்பது தொழில் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. அனைத்து மாநிலங்களும் மின்சாரம் தடை இல்லாமல் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

24 மணி நேரமும், வருடம் முழுவதும் நியாயமான விலையில் மின்சாரம் கிடைக்க வேண்டும். குறைந்த அளவு மின்சாரம், அதிகளவு மின்சாரம் என்று இல்லாமல் சீரான மின்சாரம் கிடைக்க வேண்டும்.

குறிப்பிட்ட பொருளுக்காக வெளிநாடுகளை நம்பி இருந்தால், அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே, வாய்ப்புகளை வர்த்தகர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய மந்திரி எல்.முருகன்

நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் பேசும்போது, ‘இந்தியாவில் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. இறால் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை பொறுத்தமட்டில் இந்தியாவில் தான் அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது’ என்றார்.

இதைத்தொடர்ந்து மத்திய தொழில்துறை இணை மந்திரி அனுப்பிரியா படேல் பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தென் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் சாரா கிர்லேவ், மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தகத்துறையின் இயக்குனர் ஜெனரல் சந்தோஷ்குமார் சாரங்கி, தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அருண்ராய் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story